செங்கல்பட்டு பகுதிகளில் வீட்டின் முன்பு நிறுத்தி இருக்கும் பைக்கை திருடும் மர்ம கும்பல்; வீடியோ வைரலால் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளை குறிவைத்து ஒரு மர்ம கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. இதுதொடர்பான சிசிடிவி காமிரா பதிவுகள் நேற்றுமுன்தினம் முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சிவசஞ்சீவி (26). இவர் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் தனது விலையுயர்ந்த பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி பூட்டியுள்ளார். நேற்று காலையில் பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்தார்.

உடனே அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், ‘நேற்று அதிகாலை இவரது வீட்டின் முன்பு நம்பர் பிளேட் இல்லாத பைக் வந்து நிற்கிறது. அதில், வந்த 3 பேரும் முகமூடி அணிந்திருக்கின்றனர். பைக்கில் இருந்து இறங்கிய ஒருவர், சிவசஞ்சீவியின் பைக் பூட்டை உடைக்கிறார். பின்னர் திருடிய பைக்குடன் 3 மர்ம நபர்களும் தப்பி செல்வது’பதிவாகி இருந்தது. மேலும், செங்கல்பட்டு நகரின் பல்வேறு குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை மட்டும் குறிவைத்தும் இந்த 3 மர்ம கும்பல் திருடி வருவது சிவசஞ்சீவிக்கு தெரியவந்தது.

 இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசில் சிவசஞ்சீவி புகார் செய்தார். மேலும், தான் சேகரித்த சிசிடிவி காமிரா பதிவுகளை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, 3 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சிசிடிவி காமிரா பதிவுகள் செங்கல்பட்டு முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: