ஏரியில் மீன் பிடிப்பதில் பிரச்னை வாலிபர் சரமாரி வெட்டி படுகொலை; திருவள்ளூர் கோர்ட்டில் 2 பேர் சரண்

திருவள்ளூர்: ராணிப்பேட்டை அருகே ஏரியில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குண்டு (எ) சுப்பிரமணி. இவர் அங்குள்ள விளாரி ஏரியில் மீன்பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த தினகரன்(42), இவரது மகன் அசோக் (21) ஆகியோர் மீன் பிடிப்பதற்காக சுப்பிரமணிக்கு உதவியாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த கலையரசன்(21) என்பவர் இரவு நேரங்களில் விளாரி ஏரியில் குத்தகைக்காரர்களுக்கு தெரியாமல் மீன்களை பிடித்து வந்துள்ளார். இதுதொடர்பாக தினகரன், அசோக், கலையரசன் ஆகியோர் இடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக இரண்டு தரப்பினரும் திமிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கலையரசன் ஏரியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக நேற்றுமுன்தினம் காலை தினகரன், கலையரசன் இடையே கடும் வாக்குவாதம் தகராறு ஏற்பட்டபோது கலையரசன் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து தினகரனை வெட்ட முயன்றுள்ளார்.

அப்போது குறுக்கிட்ட தினகரனின் மகன் அசோக், அந்த கத்தியை பிடுங்கி கலையரசனை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த கலையரசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், கலையரசன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திமிரி போலீசார் சென்று விசாரித்தனர். கொலை வழக்கு பதிவு செய்து தினகரன், அசோக் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான சீனிவாசன் (62), தினேஷ் (25) ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: