×

அடிப்படை வசதிகளை செய்து தர கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து மக்கள் மறியல்; கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஓபசமுத்திரம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இங்கு, சுண்ணாம்புகுளம் சாலையில் உள்ள குழிநாவல் கிராமத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் குடிநீருக்காக பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை குழிநாவல் மக்கள் புகார் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், குழிநாவல் கிராமத்துக்கு குடிநீர், கழிவறை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்து தர வலியுறுத்தி, நேற்று காலை குழிநாவல்-சுண்ணாம்புகுளம் செல்லும் சாலையில், அரசு பஸ்சை சிறைபிடித்து குழிநாவல் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஆரம்பாக்கம் போலீசார், வருவாய்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். சம்பந்தப்பட்ட துறைகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Gumpipundi , People picketed the government bus demanding provision of basic facilities; Bustle near Kummidipoondi
× RELATED ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 20 கிலோ கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது