உபி.யில் ஒரே ஊரில் டாட்டூ மோகத்தால் 14 பேருக்கு எய்ட்ஸ்: ஒற்றை ஊசியை பயன்படுத்தியதால் விபரீதம்

புதுடெல்லி: உத்தர பிரசேதத்தில் ‘டாட்டூ’ எனப்படும் பச்சை குத்திக் கொண்ட இளம்பெண், வாலிபர் உட்பட 14 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டைலுக்காக உடலில் ‘டாட்டூ’ எனப்படும் பச்சையை விதவிதமாக  குத்திக் கொள்வது இப்போது பேஷனாகி விட்டது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  இப்படிப்பட்ட மோகத்தால், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் 14 பேருக்கு எச்ஐவி  பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது பற்றி பண்டிட் தீனதயாள் உபாத்யா மருத்துவமனையின் டாக்டர் பிரீத்தி அகர்வால் கூறுகையில், ‘20 வயது வாலிபர், 25 வயது இளம்பெண் உட்பட பலர் சமீபத்தில் மருத்துவமனைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வந்தனர்.  அவர்களுக்கு பலமுறை மருந்துகள் கொடுத்தும் காய்ச்சல் குறையவில்லை. சந்தேகத்தின் பேரில் அவர்களுக்கு எச்ஐவி பரிசோதனை நடத்தப்பட்டதில், 14 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதியானது. இவர்கள் யாரும் எச்ஐவி பாதித்தவர்களுடன் பாலியல் உறவு கொள்ளவில்லை. ரத்தம் செலுத்திக் கொள்ளவும் இல்லை.

அவர்கள் அனைவரும் வாரணாசியில் உள்ள ஒருவரிடமே பச்சை குத்திக் கொண்டது தெரிய வந்துள்ளது. பச்சை குத்தும் ஊசி விலை அதிகமானது. இதனால்,  ஒரே ஊசியை பயன்படுத்தி பலருக்கு பச்சை குத்தப்படுகிறது.  இதன் காரணமாகவே, இவர்களுக்கு எச்ஐவி ஏற்பட்டுள்ளது. எனவே, பச்சை குத்துவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் அல்லது புதிய ஊசி பயன்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் ,’என்று தெரிவித்தார்.

Related Stories: