×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வார சந்தை அமைக்க தீர்மானம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் மாலா முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் புதிதாக வாரச்சந்தை வளாகம் அமைக்க வேண்டும். திருவள்ளூர் சாலையில் உள்ள ஆந்திர மாநிலம் சுருட்டப்ள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் இடத்தினை 15 வருடம் குத்தகை எடுக்கவும் காமராஜர் மண்டபம் தெருவில் புதிதாக சாலை அமைப்பது, நாகலாபுரம் சாலை இருபுறமும் சத்தியவேடு சாலை, மாதா மண்டபம் தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் கால்வாய் பழுது பார்க்கவேண்டும். கிருஷ்ணா குடியிருப்பு பகுதியில் 35 வருடங்களாக வசித்துவரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கலைஞர் நகர் பகுதியில் சோலார் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், துணைத் தலைவர் குமரவேல் பேசும்போது, ‘’ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் சுற்றிலும் கடைகள் கட்ட வேண்டும். பஸ் நிலையம் பின்புறம் சாலை அமைக்க வேண்டும். பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை நடத்துபவர்கள் அந்த கடைகளின் கழிவுநீரையும் குப்பையையும் அருகில் உள்ள தாமரை குளத்தில் விடுகிறார்கள் அதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். திமுக கவுன்சிலர் அபிராமி கூறும்போது, ‘’பழைய பேரூராட்சி பின்புறம் உள்ள குப்பை கிடங்கை அகற்றி வேறிடத்துக்கு மாற்றவேண்டும். அந்த இடத்தை வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு வீடோ அல்லது கடையோ கட்டிக்கொள்ள தரை வாடகைக்கு விட்டால் பேரூராட்சிக்கு வருவாய் ஈடுட்ட முடியும்’ என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோகுல்கிருஷ்ணன், கோல்டுமணி, ஆப்தாப்பேகம், வெங்கடேசன், இந்துமதி, ஜீவா, கல்பனா, ஆனந்தி, அருணாசலம் கலந்துகொண்டனர். தலைமை எழுத்தர் பங்கஜம் நன்றி கூறினார்.

Tags : Uthukottai , Resolution to set up a weekly market in Uthukottai municipality
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...