பந்தலூர் அருகே பரபரப்பு: பள்ளி சுவரை உடைத்து புகுந்த காட்டு யானைகள்

பந்தலூர்: பந்தலூர் அருகே அரசு பள்ளியின் மதில்சுவரை உடைத்து புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர்  அருகே அய்யன்கொல்லி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு  உறைவிடப் பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் மதில் சுவரை  உடைத்து பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. தகவலறிந்து சேரம்பாடு வனத்துறையினர் சென்று காட்டு யானைகளை விரட்டினர். நேற்று காலை 7  மணி அளவில் 2 காட்டு யானைகள் பள்ளி  கேட்டை உடைத்துக் கொண்டு பஜார் பகுதியில் நுழைந்தது. யானைகளை பார்த்த  வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அந்த யானைகள்  அய்யன்கொல்லி பஜார் வழியாக விவசாய  நிலத்திற்குள் சென்றது. மேலும்நேற்று முன்தினம் இரவு 3 யானைகள் மழவன்  சேரம்பாடி குடியிருப்பு பகுதியில் புகுந்து வீட்டின் அருகே இருந்த தண்ணீர்  தொட்டிகள், கோழி கூண்டுகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை  உடைத்து சேதப்படுத்தியது. வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து  குடியிருப்பு பகுதிக்குள்  நுழையும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள்  விரட்டவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: