வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்குள் வடிகால் பணியை விரைந்து முடிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்குள் விரைந்து முடிக்க

கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 மற்றும் உலக வங்கி நிதியுதவி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி, ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவி, மூலதன நிதி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, வெள்ளத்தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு திட்ட நிதியுதவியுடன் சுமார் 1055 கி.மீ. நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது இந்த பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மேலும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பணி நடைபெறும்  இடங்களில்  ஆய்வு செய்து, பணி முன்னேற்றம் குறித்த விவரங்களை கேட்டறிந்து வருகிறார்.

வடகிழக்கு பருவமழையானது அடுத்த 2 மாத காலத்தில் தொடங்க உள்ள நிலையில், முதல்வர் ஆலோசனையின் படி, குறைந்த சதவீதம் மட்டுமே பணிகள் நடைபெற்ற பகுதிகளில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு, கூடுதல் தலைமை செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததார்களுடனான ஆலோசனை கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஒவ்வொரு சிப்பங்கள் வாரியாக மழைநீர் வடிகால் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய சென்னையின் பிரதான பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 பணி நடைபெறும்போது, ஒப்பந்ததாரர்களுக்கு குறிப்பாக பிற சேவை துறைகளிடமிருந்து முழு ஒத்துழைப்பு அளிக்க மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பிரதான பகுதிகளான ராமசாமி சாலை, பி.வி.ராஜமன்னார் சாலை, அண்ணா பிரதான சாலை, பசுல்லா சாலை, ரயில்வே பார்டர் சாலை, சுப்ரமணிய நகர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட ஜி.என்.செட்டி சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியையும் சிவ்தாஸ் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர், வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்குள் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் எம்.எஸ்.பிரசாந்த், மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான்,  வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், திரு.வி.க.நகர் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: