சென்ட்ரலில் இருந்து ரயில்கள் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ரயில்வே போலீசார் நடவடிக்கை

தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கும் சிலர், மொத்தமாக சேகரித்து, அதை ரயில்கள் மூலம் ஆந்திராவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக, வடசென்னை பகுதிகளான கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மீஞ்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளை போல் அரிசி மூட்டைகளை ரயில் மூலம் கடத்தி செல்கின்றனர். ரயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி, அவ்வப்போது இந்த கடத்தல் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கடந்த 2 நாட்களாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் ரயில்களில் ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார், கொருக்குப்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  அப்போது, ரயில்களின் சீட்டுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது, ரேஷன் அரிசி என தெரியவந்தது. அதை கடத்த முயன்றவர்கள் தப்பினர். 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை அம்பத்தூர் குடிமைபொருள் உணவு பாதுகாப்பு புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: