×

7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 2009ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணிகளில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதா?: அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டதால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அதன்படி, ஊதிய விகிதங்கள் மாற்றி அமைத்து 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதில் 2009ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்படவர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை பொருந்தாது என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த அரசாணைக்கு முரணாக 2009ல் பணியில் சேர்ந்த 4500 பேர் புது சம்பளம் பெற்றுள்ளனர்.

அதேபோல, தங்களுக்கும் ஊதிய உயர்வு பலன்களை 18 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிடக் கோரி வேளாண் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் உள்ள 18 பேர் 2018ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண் ஆஜராகி, 2010ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை என்பது 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு பொருந்தாது. மேலும் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

இதனை ஏற்று அரசுக்கு 2 வார கால அவகாசம் வழங்கிய நீதிபதி, இந்த வழக்குகளில் உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளை எதிர் மனுதாரர்களாக சேர்த்தும் உத்தரவிட்டார்.
மேலும், 2009ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Tags : ICourt , As per the recommendation of the 7th Pay Commission, the salary increase was given to those who joined government jobs after 2009?: ICourt order to file as government report
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...