வரலாறு படித்துவிட்டு சட்டம் படித்ததாக சான்றிதழ்; போலி வக்கீல் மீது வழக்குப்பதிவு: குற்றப்பிரிவு போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வரலாறு இளங்கலை படித்துவிட்டு சட்டம் படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரை சேர்ந்த சாந்தி என்பவர் தான் தத்து எடுத்த மகனை ஒப்படைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அண்ணாநகரை சேர்ந்த பாபு என்பவர் தன்னை வழக்கறிஞர் என்று கூறி வருகிறார் என்று தெரிவித்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜெகதீஸ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாந்தியின் புகாரின் அடிப்படையில் பாபுவின் சான்றிதழை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அதில், திருச்சி பாரதிதாசன் பல்கலையில் சட்டப்படிப்பில் பட்டம் வாங்கியதாக தனது சான்றிதழை பாபு தாக்கல் செய்தார். அதில், தமிழில் ‘முதல் வகுப்பில் தேர்ச்சி’ என்றும் ஆங்கிலத்தில் ‘இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி’ என்று அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து, பாபுவின் சான்றிதழ் போலி என்று தெரியவந்தது.  

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாபுவுக்கு எப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சட்டத்தில் பட்டம் என்று சான்றிதழ் தந்துள்ளது என்று விசாரித்ததில் அப்படி ஒரு சான்றிதழே வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பாபுவின் அனைத்து கல்வி தகுதியும் கேள்விக்குரியாக உள்ளது.

 

எனவே, பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உதவி கமிஷனர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை சென்னை போலீஸ் கமிஷனர் நியமிக்க வேண்டும். பாபுவின் சான்றிதழ்களை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பாபு வேறு ஏதாவது நபருக்காக வழக்கில் ஆஜராகியுள்ளாரா. அவர் மீது புகார் எதுவும் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள அவரது புகைப்படத்தை பத்திரிகைகளில் விசாரணை அதிகாரி வெளியிட வேண்டும். இந்த விஷயத்தை தமிழ்நாடு பார்கவுன்சில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: