×

தகைசால் தமிழர் விருதுக்கு நல்லகண்ணு தேர்வு: அரசு அறிவிப்பு

சென்னை: 2022ம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருது 2021ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல்கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு 2022ம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர் விருது’ வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

“தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லகண்ணுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வரும் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Nallakannu Selection for Thakaisal Tamil Award: Govt Notification
× RELATED புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற...