×

போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த அரசு நிலத்தை மீட்க கலெக்டருக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொளத்தூர் தொகுதியில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மாவட்ட கலெக்டருக்கு அனுமதியளித்து, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியது. ஆனால் அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வெற்றி என்பவர் உள்ளிட்ட இருவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றனர். இந்த உத்தரவுகளையும், தீர்வு அதிகாரி பிறப்பித்த உத்தரவையும் இணைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி நிலம் வெற்றி உள்ளிட்ட இருவருக்கு சொந்தமானது என்பதால் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என்று உத்தரவிட்டது.  இந்நிலையில், போலி ஆவணங்களை தாக்கல் செய்து நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றுள்ளதாக கூறி இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை மாவட்ட கலெக்டர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போலி ஆவணங்கள் மூலம் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளது. எனவே, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது.

அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போலி ஆவணங்கள் பயன்படுத்தி உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றவர்களுக்கு எதிராக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Collector allowed to recover government land seized by fake documents: ICourt order
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...