×

உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைய வேண்டும் உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் வரவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை

சென்னை: பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்மொழி இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், டெல்லி தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி முன்னிலை வகித்தனர்.
 
விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டமானது 1993ம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 1997ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது.  இதை உருவாக்கியவர் கலைஞர். இதற்கான முறையான அறிவிப்பை தமிழகத்தினுடைய  சட்டமன்றத்தில் 1997 ஏப்ரல் 16ம் தேதி, விதி எண் 110ஐ பயன்படுத்தி முதல்வர் கலைஞர் அன்றைக்கு வெளியிட்டார். அதன்படி உருவாக்கப்பட்ட மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவைத்தான் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதனின் மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். பெரியார், முதன்முதலில் தான் உருவாக்கிய அமைப்புக்கு ‘சுயமரியாதை இயக்கம்’ என்றுதான் பெயர் சூட்டினார். சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உயிரினும் மேலானது. மனித உரிமைக்கு அடித்தளமானதும் சுயமரியாதைதான்.

இவை எல்லாம் ஏதோ அரசியல் கட்சியின் கருத்துகள் மட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டம் சொல்வதும் இதைத்தான். அரசியலமைப்பு சட்டத்தின் மிகமிக அடிப்படையான அம்சம் என்பதே மனித உரிமைகள்தான். சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, எண்ணங்களை வெளியிடும் உரிமை, ஒன்றுகூடும் உரிமை, பணிகள் செய்யும் உரிமை, மத சுதந்திரம், கல்வி உரிமை, சொத்துரிமை, பாதிக்கப்பட்டால் அதற்காக தீர்வு காணும் உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. அதனை காக்கும் பொறுப்பும் கடமையும் அனைத்து அரசுகளுக்கும் உள்ளது. அந்த கடமையில் இருந்து நாங்கள் ஒருநாளும் தவறமாட்டோம் என்ற உறுதியை இங்கே தருகிறேன்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.

ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இங்கு பேசிய உறுப்பினர்கள், ஆணையத்தின் விசாரணை குழுவில் காவல்துறையினரின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சொன்னார்கள்.  இதுகுறித்தும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். மனித உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக போராடி வருபவர்களையும் இதில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆராயப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். மனித உரிமை தகவல்கள் மக்களை சென்றடைய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.

மனித உரிமை கொள்கை, கோட்பாடுகள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்த பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். எந்தவொரு தனிமனிதனின் உரிமையும் மீறப்படக் கூடாது. எத்தகைய சமூகமும் எதன் பொருட்டும் இழிவுபடுத்தப்படக் கூடாது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் எனது சில கோரிக்கைகளை முன்வைக்கவும் நான் விரும்புகிறேன். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்மொழி ஆக்கப்பட வேண்டும் - இவை சட்டத்தின் ஆட்சியில் மக்களின் கோரிக்கைகளாக அமைந்துள்ளன. இந்த கோரிக்கைகள் சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் முன்வைத்தவைதான். இருப்பினும் மீண்டும் அவற்றை இங்கு வலியுறுத்த, நினைவூட்ட விரும்புகிறேன். இங்கு வந்து கவுரவித்துள்ள மாண்பமை நீதிபதிகள் அவற்றை தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றித்தரவும் உங்கள் அனைவரின் சார்பில் நான் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற சமூகநீதி தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். மக்களுக்கு இன்றைய தேவை என்ன என்பது மட்டுமல்ல, முக்கியமாக நீதி மட்டும்தான் என்பதை நாங்கள் அறிவோம். குறள் வழி நடக்கும் அறவழி ஆட்சியால், தமிழ் மக்களின் நலனையே முன்வைத்து செல்கிறோம். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து விழைகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள், இந்நாள் நீதிபதிகள், தலைமை செயலாளர் இறையன்பு, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், சித்தரஞ்சன் மோகன் தாஸ்,  மாநில மனித உரிமை ஆணையத்தின் செயலாளர் விஜய் கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மனித உரிமைகள் செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.காயத்ரி கிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் கே.செந்தில் ராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் எம்.அரவிந்த், மதுரை மாநகர காவல் ஆணையர் டி.செந்தில்குமார், கோவை மாவட்ட எஸ்.பி. வி.பத்ரி நாராயணன், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தால் நடத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா, தமிழ் கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேடயம், பரிசுகளை வழங்கினார்.

Tags : Supreme Court Branch ,Chennai ,Chief Minister ,BC K. Stalin , Supreme Court branch should be located in Chennai, Tamil should be the language of litigation in the High Court: Chief Minister M. K. Stalin's demand again
× RELATED 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்...