துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜ வேட்பாளர் தன்கர் வெற்றி; காங்கிரசின் மார்கரெட் ஆல்வாவை 346 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்: 11ம் தேதி பதவி ஏற்பு விழா

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் அமோக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை 346 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதைத் தொடர்ந்து, நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக அவர் வரும் 11ம் தேதி பதவியேற்க உள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. இதில், பாஜ கூட்டணி சார்பில் முன்னாள் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கரும் (71), எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராஜஸ்தான் ஆளுநருமான மார்கரெட் ஆல்வாவும் (80) நிறுத்தப்பட்டனர். இத்தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் வாக்களிப்பார்கள். பாஜ.வுக்கு மக்களவையில் 303 எம்பிக்களும், மாநிலங்களவையில் 91 எம்பி.க்களும் உள்ளனர். மேலும், அதிமுக, பிஜூ ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் பாஜ வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தன.

அதே சமயம், எதிர்க்கட்சிகள் சார்பில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, ஜெகதீப் தன்கர் வெற்றி பெறுவது ஏற்கனவே உறுதியானது. இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பிரதமர் மோடி முதல் நபராக காலை 10 மணிக்கு வந்து வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் காலையிலேயே வாக்களித்தனர். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் பிற்பகலுக்கு பிறகு வாக்களித்தனர். முதுமை காரணமாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீல்சேரில் வந்து வாக்களித்து, இரு வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மாநிலங்களவையில் 8 எம்பிக்கள் இடம் காலியாக உள்ளதால், இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 780 எம்பிக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது. இதில், 725 எம்பிக்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 92.94 சதவீத வாக்குகள் பதிவாகின. 15 ஓட்டுகள் செல்லாதவை. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு  வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இரவு 8 மணி அளவில் வாக்கு முடிவுகளை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.

இதில், பாஜ கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும், மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம், 346 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார். டெல்லியில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் வீட்டில் ஜெகதீப் தன்கரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தன்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக தன்கர் வரும் 11ம் தேதி பதவியேற்க உள்ளார். துணை ஜனாதிபதியே மாநிலங்களவையை நடத்தும் அவைத்தலைவராகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்று, நாட்டின் 15வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா தோல்வி அடைந்தார். இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலிலும் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா தோல்வி அடைந்திருப்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கிராமத்தில் பிறந்தவர்: ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கிதானா கிராமத்தில் 1951ம் ஆண்டு மே 18ம் தேதி பிறந்தவர் ஜெகதீப் தன்கர். சைனிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர் சட்டம் பயின்று, 1979ல் ராஜஸ்தான் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 1990ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவரது சட்டப் பணி தொடர்ந்தது. ஜனதா தளம் கட்சியில் சேர்ந்த அவர் 1989ம் ஆண்டு ஜுன்ஜுனுவில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். கட்சியில் சில கருத்து வேறுபாடு காரணமாக 1993 முதல் 1998 வரையிலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அப்போது, ராஜஸ்தானில் எம்எல்ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், 2008ல் பாஜ.வுக்கு திரும்பிய ஜெகதீப், 2019ம் ஆண்டு வரை அதிகம் அறியப்படாத தலைவராகவே இருந்துள்ளார். 2019ல் அவர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, அம்மாநில முதல்வர் மம்தாவுடன் பல்வேறு விஷயங்களில் மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தார். ஆட்சி நிர்வாகத்தில் தங்கர் தலையிடுவதாக அவர் மீது மம்தா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனால் நாடு முழுவதும் பிரபலமடைந்த தன்கர், துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது யாரும் எதிர்பார்க்காத தேர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: