×

அதிமுக ஆட்சியில் சில திட்டங்களை தொட்டுதான் சென்றீர்களே தவிர எதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை: பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டிற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருக்கின்ற பிக்கல் பிடுங்கலிலிருந்து கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொண்டு நீர்வளத்துறையில் நடைபெறும் திட்டங்கள் குறித்து குறை சொல்லி பேசி இருக்கிறார். எங்களை குறை சொல்வது ஒருபுறம் இருந்தாலும், திரு. எடப்பாடி பழனிச்சாமி காவிரி-குண்டாறு இணைப்பு, நடந்தாய் வாழி காவிரி, சரபங்கா திட்டம், அத்திக்கடவு-அவினாசி ஆகிய திட்டங்கள் எல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கிறதே என்பதில் எனக்கு ஆச்சரியம்.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது திட்டங்களின் பெயர்களை உச்சரித்துவிட்டு சில திட்டங்களை தொட்டுவிட்டுத்தான் சென்றீர்களே தவிர எதையும் முழுமையாக  நிறைவேற்றவே இல்லை. நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு 11,400 கோடி வேண்டும் என்று பாரத பிரதமரிடம் கோரிக்கை வைத்தீர்கள். கோரிக்கை வைத்ததோடு சரி. ஒரு ரூபாயும் நீங்கள் அந்த 11,400 கோடியில் வாங்கவில்லை என்பது தங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.சரபங்கா திட்டத்திற்கு 565 கோடி செலவு செய்தீர்களே தவிர, 10 ஏரிகளுக்காவது தண்ணீர் கொடுத்தது உண்டா?

தண்ணீரை ஏரிகளுக்கு எடுத்துச் செல்ல ஒரு அங்குலம் குழாய் (pipe) ஆவது புதைத்ததுண்டா? நீரேற்று நிலையம் (Pumping Station) கட்டி முடிக்காமலேயே போய்விட்டீர்கள். அதுமட்டுமல்ல, முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமான நில எடுப்பு பணிகளை மறந்தே போனீர்கள். இப்போது நாங்கள் வந்துதான் நீங்கள் மறந்துவிட்டுப் போன பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். ஓடையில் தண்ணீர் எடுத்து விடுவது போல எம்.காளிப்பட்டி ஏரிக்கு மட்டும் தண்ணீரை காட்டினீர்களே தவிர அந்த தொகுப்பில் உள்ள மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாங்கள் வந்து அந்த தொகுப்பில் அடங்கியுள்ள 6 ஏரிகளையும் சேர்த்து கூடுதலாக 7 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கி இருக்கிறோம். ஆனால், இவ்வளவு வேலை பாக்கி இருந்த போதும் ஒப்பந்ததாரருக்கு மட்டும் கச்சிதமாக Bill Settle ஆனது எப்படி? அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை பொறுத்த வரையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருந்த காரணத்தால் சற்று தாமதம் ஏற்பட்டது. இப்போது, பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இதுவரை
95 சதவீதபணிகள் முடிக்கப்பட்டுள்ளது. வரும்டிசம்பர் 2022 க்குள்அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டமானது, மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணையாறு-பாலாறு-காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.காவிரி ஆற்றின் குறுக்கே மாயனூர் கதவணையிலிருந்து வெள்ள உபரி நீரை குண்டாறு வரை கொண்டு செல்லும் திட்டமாகும். இந்த திட்டத்தை நீங்கள் ஆட்சியில் இருந்து இறங்கும் போது துவக்கினீர்கள். அது தான் இந்த திட்டத்திற்கு நீங்கள் செய்த பெரும் தொண்டு.
இந்த திட்டம் மூன்று கட்டங்களாக மொத்தம் 262.19 கி.மீ நீளத்திற்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டம் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை. இரண்டாம் கட்டம் தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை. மூன்றாம் கட்டம் வைகை முதல் குண்டாறு வரை. முதல் கட்டம் ரூ.6,941 கோடி மதிப்பீட்டில் 118.45 கி.மீ நீளத்திற்கு 4 சிப்பங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதில் ஒரு பகுதியான 10 கி.மீ தூரத்திற்கு மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.330 கோடி ரூபாய் உங்கள் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி வைக்கப்பட்டது.

இதில் ஏறக்குறைய 50 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகள் ஆமை வேகத்தில் அல்ல எதிர்க்கட்சித் தலைவர் பந்தைய குதிரை வேகத்தில் நடைபெற்று வருகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : minister ,duraymurugan , In the AIADMK regime, you touched on some projects but did not complete anything: Minister Duraimurugan slams Palaniswami.
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...