மானாமதுரை-காரைக்குடி ரயில்பாதையில் மின்பாதை பணி சுணக்கம்: விரைந்து முடிக்க கோரிக்கை

மானாமதுரை: மானாமதுரை-காரைக்குடி இடையே மின்பாதை அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன. பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் டீசல் ரயில் இஞ்சின்களை நிறுத்திவிட்டு மின்சார ரயில்களை இயக்க அனைத்து ரயில்பாதைகளும் மின்மயமாக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. இவற்றில் தென்மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மின்பாதை அமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு தனியார் பங்களிப்புடன் துவக்கப்பட்டது.

அதன்பின் கொரோனா காரணமாக பணிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மீண்டும் இப்பணிகள் கடந்த 2021 அக்டோபரில் துவங்கின. மதுரை-மானாமதுரை, மானாமதுரை-விருதுநகர், திருச்சி-காரைக்குடி உள்ளிட்ட முக்கிய பாதைகள் மின்மயமாக்கும் பணி முடிந்து திருச்சி-காரைக்குடி, மானாமதுரை-மதுரை வழித்தடங்களில் மின்சார ரயில்கள இயக்கப்படுகின்றன. மேலும் மானாமதுரை-ராமநாதபுரம் பணிகள் முடிந்து ஆய்வுக்காக காத்திருக்கிறது. ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம், மானாமதுரை-காரைக்குடி இடையே உள்ள பாதைகளில் மின்பாதை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

காரைக்குடி மானாமதுரை இடையேயான மின்பாதை பணி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடந்து வருகிறது. ரயில்பாதைகளில் மின்கம்பங்கள் நடப்பட்டு மானாமதுரை வரை உயர்அழுத்த மின்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் பாலங்களில் உள்ள இரும்பு கர்டர்களில் மின்கம்பங்களை வெல்டிங் முறையில் நிறுவும் பணிகள் மட்டுமே நடந்துள்ளது. அங்கு மின்கம்பிகள் பொருத்தும பணிகள் நடைபெறவில்லை. லெவல்கிராசிங்குகளில் ஹைட்கேஜ் எனும் உயரதடுப்பு கர்டர்கள் பொருத்தும் பணிகளை காரணம் காட்டி சில இடங்களில் மின்கம்பிகள் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது அங்கு உயரத்தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் மின்கம்பிகளை இணைக்கவில்லை. இப்பணிகளை விரைந்து முடித்தால் வடமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் ரயில்களை நீட்டிப்பு செய்யவும், டீசல் இஞ்சினுக்கு மாற்றாமல் நேராக ராமேஸ்வரம் செல்ல முடியும் என்பால் மின்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: