×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை; பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, உலக வங்கி நிதியுதவி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி, ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவி, மூலதன நிதி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, வெள்ளத்தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு திட்ட நிதியுதவியுடன் சுமார் 1055 கி.மீ. நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் அவர்கள் அவ்வப்பொழுது, இந்தப் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.  மேலும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களையும், அரசு உயர் அலுவலர்களையும்  பணி முன்னேற்றம் குறித்து அவ்வப்பொழுது ஆய்வு செய்ய அறிவுறுத்தி, அதுகுறித்த விவரங்களை கேட்டறிந்து வருகிறார். வடகிழக்கு பருவமழையானது அடுத்த இரண்டு மாதக் காலத்தில் தொடங்க உள்ள நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்பேரில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி குறைந்த சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களுக்கும்,

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததார்களுடனான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 05.08.2022 அன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு சிப்பங்கள் வாரியாக மழைநீர் வடிகால் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய சென்னையின் பிரதான பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.   பணி நடைபெறும் பொழுது, ஒப்பந்ததாரர்களுக்கு குறிப்பாக பிற சேவைத்துறைகளிடமிருந்து முழு ஒத்துழைப்பு பெற மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.08.2022) கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பிரதான பகுதிகளான ராமசாமி சாலை, பி.வி. ராஜமன்னார் சாலை, அண்ணா பிரதான சாலை, பசுல்லா சாலை, இரயில்வே பார்டர் சாலை, சுப்ரமணிய நகர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும்,

தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட ஜி.என்.செட்டி சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது, மழைநீர் வடிகால்களில் நீர் உட்புகும் வண்டல் வடிகட்டி தொட்டிகள் (Silt Catch Pit) உரிய  அளவுகளின் படி உள்ளதா என ஆய்வு செய்தார். தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை, வீராசெட்டி தெரு, டிக்காஸ்டர் சாலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, காந்தி கால்வாய் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்கள் பக்கிங்ஹாம் கால்வாயில் இணையும் இடத்தில் குறிப்பாக தமிழ்நாடு மின் தொடர்பு கழக மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கால்வாயில் தேங்கியுள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம் கவி அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (பணிகள்) திரு.எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள், வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலக் குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார் அவர்கள், தலைமைப் பொறியாளர் (பொது) திரு.எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Chennai Corporation , Instructions to contractors to complete rainwater drainage works in Chennai Municipal Corporation areas by September
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...