நெருங்கும் பண்டிகை காலம்!: கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்..!!

டெல்லி: பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 19,406 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,41,26,994ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணம் அடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5,26,649 ஆக அதிகரித்திருப்பதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

1,34,793 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்து வரும் மாதங்கள் முழுவதும் பண்டிகை நாட்கள் என்பதால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. இந்நிலையில், கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நாட்டில் கொரோனா 2ம் அலை இன்னும் முடியவில்லை. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலால் அதனை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் விரைவாக வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பண்டிகை வர உள்ளதால் மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: