பீகார் அரசுப் பள்ளியில் அலட்சியம்; 50 மாணவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி: மதிய உணவில் ‘பல்லி’ கிடந்ததாக புகார்

பாட்னா: பீகாரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி கிடந்ததால், அதை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள  ஜகதீஷ்பூர் சைனோ அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் நேற்று மதிய உணவை சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டதால் மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர்.

தகவலறிந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு  விரைந்து சென்று தங்கள் குழந்தைகளை ஜகதீஷ்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து ஜெகதீஷ்பூர் பிடிஓ ரகுநந்தன் ஆனந்த்  கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  அனுமதிக்கப்பட்டனர். காய்கறிகள் சமைக்கும் போது அதில் பல்லி விழுந்ததாக மாணவர்கள் கூறினர்.

நாங்கள் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளோம். உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. சோதனை அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சமையல்காரருக்கு எதிராக துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்கள். தற்போது மாணவர்கள் நலமுடன் உள்ளனர்’ என்றார்.

Related Stories: