விபத்து தொடர்பாக வழக்குபதிவு: தமிழக போலீஸ் விசாரணைக்கு பயந்து எம்எல்ஏ மகன் ஓட்டமா?

திருபுவனை: கலித்திரம்பட்டு அருகே நடந்த சாலை விபத்து தொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்ததால், விசாரணைக்கு பயந்து புதுச்சேரி எம்எல்ஏ மகன் ஓட்டம் பிடித்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இருமாநில போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி, திருக்கனூர் அடுத்த செல்லிப்பட்டை சேர்ந்தவர் அங்காளன் (52). சுயேட்சை எம்எல்ஏவான இவர் தற்போது சட்டசபையில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளார். இவரது மகன் திலகரசர் (28). தனியார் பஸ்சில் செக்கராக வேலை செய்த திலகரசர் கடந்த 4ம்தேதி மாயமானார்.

இதுதொடர்பாக அங்காளன் எம்எல்ஏ, திருக்கனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து மாயமான திலகரசரை தேடி வருகின்றனர். மேலும் அவரது செல்போனை சர்வீஸ் செய்ய கடையில் கொடுத்துவிட்டு சென்றிருந்த நிலையில் திலகரசர் கடத்தப்பட்டாரா? என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது. இதனிடையே திருக்கனூர் போலீசார், திலகரசர் மாயமான சம்பவம் தொடர்பாக அவர் பணியாற்றிய தனியார் பஸ் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சில தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளது. அதாவது திலகரசர் திருக்கனூர்- புதுச்சேரி வழித்தட தனியார் பஸ்சில் செக்கராக பணியாற்றிய நிலையில் 2 முறை பஸ்சை அவர் எடுத்து ஓட்டியதும், அப்போது செல்லிப்பட்டு, கலித்திரம்பட்டு பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதில் சிலர் காயமடைந்திருப்பதும் ெதரியவந்தது. இதில் செல்லிப்பட்டு விபத்து தொடர்பாக புதுச்சேரி மேற்கு டிராபிக் போலீசாரிடம் பாதிக்கப்பட்ட நபர் முறையிட்டிருந்த நிலையில் அங்காளன் எம்எல்ஏவே நேரடியாக அங்கு சென்று சமாதானம் பேசி மகன் மீது வழக்குபதிவு செய்யப்படாமல் அழைத்து வந்ததும்,

ஆனால் கலித்திரம்பட்டு விபத்து தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் தமிழக காவல் நிலையத்தில் (கண்டமங்கலம் ஸ்டேஷன்) முறையிட்ட நிலையில் அங்குள்ள போலீசார் திலகரசர் மீது வழக்குபதிவு செய்திருப்பது தெரியவந்தது.இதுதொடர்பான விசாரணைக்காக திலகரசரை தமிழக போலீசார் தேடிவந்த நிலையில் அவர் மாயமாகி உள்ளார். எனவே விபத்து தொடர்பாக கண்டமங்கலம் போலீசாரின் விசாரணைக்கு பயந்து அவர் ஊரிலிருந்து தலைமறைவானாரா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அதன்பேரில் இருமாநில போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: