லாரி டிரைவர் எரித்துக் கொலை; க.காதலனுடன் மனைவி கைது: பரபரப்பு வாக்குமூலம்

நெல்லை: நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள தென்கலம் பகுதியில் பள்ளமடை குளத்துப்புதர் பகுதியில் கடந்த மாதம் 20ம் தேதி சுமார் 38 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து மானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மாயமானவர்களின் விவரங்கள் குறித்து சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தாழையூத்தைச் சேர்ந்த ராஜாவை காணவில்லை என அவரது மனைவி வினிதா (35) தாழையூத்து போலீசில் கடந்த மாதம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் மானூர் போலீசார் வினிதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை வினிதா கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்தது. போலீசில் வினிதா அளித்த வாக்குமூலம்: நானும் என் கணவர் ராஜாவும் கேரளா, மூணாறில் வசித்து வந்தோம். அங்கு சொந்தமாக லாரி வைத்து ராஜா தொழில் செய்து வந்தார். இந்நிலையில் வேலை சரியாக அமையாத காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்தில் குடியேறினோம். இங்கும் கணவர் ராஜா லாரி ஓட்டும் தொழில் செய்து வந்தார்.

அவரிடம் கயத்தாறு வலசலைச் சேர்ந்த தர்மராஜா (25) என்பவர் கிளீனராக வேலை பார்த்தார். இந்நிலையில் தர்மராஜாவுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசினோம். இதை கணவர் ராஜா கடுமையாக கண்டித்தார். இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி தர்மராஜா, என்னை பார்க்க வந்தபோது, வீட்டில் கணவர் ராஜா இருந்தார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது எனது கணவர் ராஜாவை, தர்மராஜா அடித்துக் கொலை செய்தார். இதைத் தொடர்ந்து வீட்டிற்குள் உடலை மறைத்து வைத்தோம்.

பின்னர் இரவு நேரத்தில் பைக்கில் உடலை கொண்டு சென்று மானூர், தென்கலம் குளத்துப்பகுதியில் எரித்துவிட்டோம். ஆனால் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து என்னையும், தர்மராஜாவையும் கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான தர்மராஜா பாளை மத்திய சிறையிலும், வினிதா கொக்கிரகுளம் பெண்கள் கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Related Stories: