×

கேரளாவில் தொடர் கனமழை: இடுக்கி அணைக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர் மழை காரணமாக இடுக்கி அணைக்கு இன்று காலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் மழைக்கு 22 பேர் பலியானார்கள். கனமழையைத் தொடர்ந்து இடுக்கி அணை நீர்மட்டம் கடந்த சில தினங்களாக வேகமாக உயர்ந்து வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் நீர்மட்டம் 2376.82 (கடல் மட்டத்திலிருந்து) அடியாக உயர்ந்ததை தொடர்ந்து அணைக்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு நீர்மட்டம் 2381.78 அடியாக உயர்ந்தது. இதனால் அணைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இன்று காலை 7.30 மணியளவில் நீர்மட்டம் 2382.52 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் 2383.53 அடியானால் மட்டுமே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் இடுக்கி அணைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அணையை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Kerala ,Idukki Dam , Heavy rains in Kerala: Red alert for Idukki Dam
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...