×

ஆற்காடு அருகே மீன்பிடி தகராறில் நடந்த வாலிபர் கொலையில் 2 பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரண்-காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

ஆற்காடு :  ஆற்காடு அருகே ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்த  தகராறில் ஏற்பட்ட முன்விரோதம்  காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை  செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி ராமபாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் குண்டு(எ) சுப்பிரமணி. இவர் விலாரி ஏரியில் மீன் பிடிப்பதற்காக குத்தகை எடுத்துள்ளார். அவரிடம் திமிரி ராமபாளையம் ரோட்டை சேர்ந்த தினகரன்(45),  அவரது மகன் அசோக்குமார்(24) ஆகியோர் மீன்பிடிப்பதற்கு உதவியாக இருந்து வருகின்றனர்.

 இந்நிலையில் ராமபாளையம் பகுதியை சேர்ந்த கலையரசன்(22) என்பவர் இரவு நேரங்களில் விலாரி ஏரியில் குத்தகைதாரர்களுக்கு தெரியாமல் மீன்பிடித்து வந்துள்ளார். இதுகுறித்த தகவலறிந்த  சுப்பிரமணி, தினகரன் ஆகியோர் கலையரசனிடம் தட்டி கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்துள்ளது. கலையரசன் தரப்பினர் சுப்பிரமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தினகரன் திமிரி போலீசில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை செய்தனர். இதுதொடர்பாக கலையரசன் தரப்பிற்கும், சுப்பிரமணி தரப்பிற்கும் முன்விரோதம்  இருந்துள்ளது.

இந்நிலையில் அனுமதியின்றி வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கடந்த மாதம் 24ம் தேதி குண்டு (எ)சுப்பிரமணியை திமிரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக கடந்த 2ம் தேதி தினகரன், கலையரசன் ஆகியோரிடையே  தகராறு ஏற்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து கலையரசன் தனது நண்பர்களிடம் நடந்த விவரங்களை கூறி அவர்களை அழைத்துக் கொண்டு தினகரன் கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போது கலையரசன் கத்தியை காட்டி தினகரனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட தினகரன் மகன் அசோக்குமார் கத்தியை பிடுங்கி கலையரசனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் கலையரசன் படுகாயமடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். மேலும் கார்த்திக் என்பவருக்கு தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம் பக்கத்தினர்  மீட்டு திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கிருந்து கலையரசனை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த  டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் கார்த்திக் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தொடர்ந்து கலையரசன் தரப்பினர் தினகரனின் கடையை சூறையாடினார்கள். மேலும் அங்கிருந்த பைக்குகள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். மேலும் கடையில் இருந்த சேகர் (65) என்பவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து  திமிரி இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். மேலும்  ராணிப்பேட்டை எஸ்பி.தீபாசத்யன்  உத்தரவின்பேரில், டிஎஸ்பி பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தினகரன் மற்றும் அசோக்குமார் உட்பட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் திமிரி அருகே பதுங்கி இருந்த தினகரன் அவரது மகன் அசோக்குமார் ஆகியோரை கடந்த 3ம் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக தினகரன் மனைவி செல்வராணியிடமும் போலீசார் விசாரணை செய்தனர். மேலும் சீனிவாசன், தினேஷ்குமார், சரத் உட்பட சிலரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் மேற்கண்ட கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த திமிரி ராமபாளையம் ரோட்டைச் சேர்ந்த சீனிவாசன்(61), அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்(25) ஆகிய இருவரும் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம்  ஜே.எம் 2 நடுவர் சத்யநாராயணன் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Tags : Thiruvallur ,Arcot , Artgad: A teenager was hacked to death due to a dispute over illegal fishing in a lake near Artgad.
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...