பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரை தேடும் பணி தீவிரம்-3வது நாளாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை

பட்டிவீரன்பட்டி : பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரை 3வது நாளாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று 4வது நாளாக தேடும் பணி நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை உள்ளிட்ட மலை கிராமங்களில் கடந்த சில வாரங்களாக மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இதன் காரணமாக பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அஜய்பாண்டியன் (28), அவரது நண்பர் சத்திரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரத்துடன் புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சுற்றி பார்க்க சென்றார். அருவியின் தண்ணீர் கொட்டும் பகுதி அருகாமையில் அஜய்பாண்டியன் நின்று போஸ் கொடுக்கும் காட்சியை கல்யாணசுந்தரம் செல்போனில் படம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது, பாறையில் கால் வழுக்கி அருவியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இவர் தவறி விழுந்த அருவிக்கு அடுத்தடுத்து 1000, 500 அடியில் பள்ளத்தாக்கு பகுதிகள் அமைந்துள்ளது.

அருவியில் விழுந்த அஜய்பாண்டியனை நேற்றுடன் 3வது நாளாக மாவட்ட உதவி தீயணைப்பு துறை அலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தீயணைத்துறையினர் 3 குழுக்காளாக தேடினர். ஆனால் அஜய்பாண்டியனை கண்டுபிடிக்க முடியவில்லை. 3வது நாளாக தேடும் பணியிலும் அஜய்பாண்டியன் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் அவருடைய குடும்பத்தினர் கவலையடைந்து கதறி அழுதனர்.

இந்நிலையில் இன்று 4வது நாளாக அஜய்பாண்டியனை தேடும் பணி நடைபெற உள்ளதாகவும், இப்பணியில் புதிய உத்திகளை கையாள இருப்பதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.இதுவரை 14 பேர் பலிகடந்த 12 ஆண்டுகளில் இந்த ஆபத்தான நீர்வீழ்ச்சி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு 14 பேர் வரை பலியாகியுள்ளனர்.

Related Stories: