×

தென்மேற்கு பருவமழை தீவிரம் பிஏபி அணைகளுக்கு நீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பு

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் தொடர்ந்து சில மாதமாக வட கிழக்கு பருவமழையும், அக்டோபர் இறுதி முதல் டிசம்பர் மாதம் வரையிலும் வடக்கு கிழக்கு பருவமழையும் என அடுத்தடுத்து  பருவமழை பெய்வது வழக்கமாக இருந்துள்ளது.
இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சிலநாட்கள் தொடர்ந்து கோடை மழை பெய்துள்ளது. இதை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து தென்மேற்கு பருவமழை சாரலுடன் பெய்ய துவங்கியது.

மூன்றாவது வாரத்திலிருந்து பருவமழை வலுக்க ஆரம்பித்தது. இந்த மழை தொடர்ந்து சில வாரமாக பகல் மற்றும் இரவு என அடிக்கடி பெய்துள்ளது. பின் இந்த மாதம் துவக்கத்திலிருந்து மீண்டும் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. அதிலும், கடந்த சிலநாட்களாக, விடிய விடிய மழை பெய்துள்ளது. ஒரு சிலநாட்களில் நாள்முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.

 இரண்டு நாட்களுக்கு முன்பு நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆனைமலை, கோட்டூர், அம்பராம்பாளையம், தாமரைகுளம், கோவில்பாளையம், ஆச்சிப்பட்டி, மணக்கடவு, நெகமம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளிலும் தொடந்து பருவமழை பல மணிநேரம் பெய்ததுடன், நேற்று காலை வரை என  விடிய விடிய பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 அதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த பருவ மழையால், பிஏபி திட்டத்திற்குட்பட்ட சோலையார், ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகளுக்கு நீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்தது. இதில், வால்பாறையை அடுத்த மொத்தம் 160 அடி கொண்ட சோலையார் அணையின்  நீர்மட்டம், இரண்டு வாரத்துக்கு முன்பு முழு அடியை எட்டியது.

இதையடுத்து, சோலையார் அணையிலிருந்து தொடர்ந்து உபரிநீர் திறப்பு இருந்தது. இதை தொடர்ந்து மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம்  கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டியது. பின் அணையின் பாதுகாப்பு கருதி, மூன்று மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே, கடந்த சிலநாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த கன மழையால், பொள்ளாச்சியை அடுத்த மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட  அதிகரித்தது. இதனால், நேற்று முன்தினம் அதிகாலையில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்ததுடன், நீர்மட்டம் 118 அடியையும் தாண்டியது.

இதனால், அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாகவும் உபரிநீர் திறக்கப்பட்டது. நேற்றும் தொடர்ந்து பெய்த மழையால், பிஏபி திட்டத்திற்குட்பட்ட சோலையார் மற்றும் பரம்பிக்குளம், ஆழியார் அணைகளுக்கு தண்ணீர் வரத்து பல மடங்காக அதிகரித்தது. இதில் சோலையார் அணைக்கு நேற்றையை நிலவரபடி வினாடிக்கு 8677கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அதே அளவு தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 163அடியாக உள்ளது.

  பரம்பிகுளம் அணைக்கு வினாடிக்கு 13617கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. வினாடிக்கு 14800கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், ஒரு வாரமாக உபரிநீர் கேரள பகுதிக்கு திறக்கப்படுவது தொடர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. அதுபோல், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து 3660 கன அடியாக இருந்தது. வினாடிக்கு 3700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

நேற்று இரண்டாவது நாளாக 11 மதகுகள் வழியாகவும் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது நீர்மட்டம் 117ஆக உள்ளது.
 பிஏபி திட்டத்திற்குட்பட்ட அணைகளுக்கு ஒவ்வொரு  ஆண்டும் பருவமழை பெய்யும் போது தண்ணீர் வரத்து இருந்தாலும், ஆகஸ்ட் மாதம் இறுதியிலேயே அணைகள் முழு அடியை எட்டிவிடும் நிலை இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டில், கோடை மழைக்கு பிறகு பருவமழையும் பல வாரமாக தொடர்ந்து கன மழையாக பெய்ததால், தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகரிப்பால், அணைத்து அணைகளும் விரைந்து முழு அடியையும் எட்டியுள்ளது. விவசாய பாசனத்துக்கு தேவையான தண்ணீர் பிஏபி அணைகளிலிருந்தே பெறப்படுகிறது என்பதால், கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டிலும் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருப்பதுடன், விவசாய பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்ற நிலை ஏற்படுவதாகவும், பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் தொடர்ந்து பெய்த பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 நேற்றைய நிலவரபடி மழையளவு (மி.மீட்டரில்): சோலையார் 132, பரம்பிக்குளம் 58, ஆழியார் 44, திருமூர்த்தி 37, அமராவதி 19, வால்பாறை 107, மேல் நீரார் 194, கீழ்நீரார் 116, காடம்பாறை 37, சர்க்கார்பதி 57, வேட்டைக்காரன்புதூர் 35, மணக்கடவு 8, தூணக்கடவு 58, பெருவாரிபள்ளம் 64, அப்பார் ஆழியார் 21, நவமலை 24, பொள்ளாச்சி 15, நல்லாறு 38, நெகமம் 9 என்ற அளவில் மழைப்பதிவாகியுள்ளது.



Tags : South , Pollachi : Coimbatore District Pollachi and Anaimalai surrounding areas from June every year.
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!