×

விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 379 வீடுகள் இடித்து அகற்றம்

*எஸ்பி தலைமையில் போலீஸ் குவிப்பு

*நீதிமன்ற உத்தரவுபடி அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் 379 ஆக்கிரமிப்பு வீடுகளை எஸ்பி ஸ்ரீநாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணி துவங்கியது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றிட நீதிமன்ற உத்தரவுபடி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்குச்சொந்தமான வி.மருதூர் ஏரி சுமார் 114 ஏக்கர் பரப்பளவை கொண்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக படிப்படியாக ஆக்கிரமிப்பாளர்களால் வீடுகள் கட்டப்பட்டு தற்போது வெறும் 70 ஏக்கர் பரப்பளவாக குறைந்துள்ளது. ஏரிகள் மட்டுமின்றி, வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் நகரப்பகுதியிலேயே தண்ணீர் சூழ்ந்துகொள்வதும், ஏரிகளில் நீரை நிரப்பமுடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அவ்வப்போது சென்றாலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அகற்றவிடாததால் திரும்பிச்சென்றனர். இந்நிலையில், நீதிமன்றம் கடுமையான உத்தரவுபிறப்பித்த நிலையில் தானாக ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி காலஅவகாசம் கொடுத்தனர். இருப்பினும் யாரும் வீடுகளை காலிசெய்யாததால் நேற்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணியை அதிகாரிகள் கையில் எடுத்தனர்.

ஏரி நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 379 வீடுகளையும் அகற்றுவதற்காக 3 பொக்லைன் இயந்திரங்கள், லாரிகளுடன் வருவாய்கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சென்றனர். பிரச்னைகள் ஏற்படாவண்ணம் எஸ்பி ஸ்ரீநாதா தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றமுயன்றபோது அங்கு சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்தி தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றும் பணி நடைபெற்றது. அசம்பாவிதங்கள் நடைபெறாவண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகரில் பலஆண்டுகளாக இருந்துவந்த மிகப்பெரிய ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீக்குளிக்கமுயன்ற பெண் அப்புறப்படுத்திய போலீசார்

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். அதிகாரிகளிடமும் தடுத்துநிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணியை மேற்கொண்டனர். இதனிடையே ஆண்டாள் என்ற மூதாட்டி தன் உடல்மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.

மாற்றுஇடம் கொடுங்கள்

மாற்றுஇடம்கேட்டு அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வி.மருதூர் ஏரியில் பலஆண்டுகளாக இருந்துவந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்பணி நேற்று தொடங்கியது. இந்நிலையில், இந்த வீடுகளைவிட்டால் வேறு எங்கு செல்வதென்றும், அரசு சார்பில் மாற்றுஇடம் வழங்கிட வேண்டுமென ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் கோரிக்கை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோயிலும் அகற்றம்

வி.மருதூர் ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்பில் குடியிருப்புகள் மட்டுமின்றி சிறியஅளவிலான விநாயகர், நாகாத்தம்மன் கோயிலும் இருந்தது. இந்த இரண்டு கோயில்களையும் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும்போது முழுவதுமாக இடித்துஅகற்றினர். 3வதாக மேலும் ஒரு கோயிலை அகற்றும்போது, இந்து முன்னணியினர் தடுத்து நிறுத்தினர். ஆடிமாத திருவிழா நடப்பதால் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை மட்டும் கைவிட்டுச்சென்றனர்.

Tags : Vilappuram ,Maradur Lake , Villupuram: Demolition of 379 encroached houses in Villupuram V. Marudhur Lake under the leadership of SP sriNatha with heavy police security.
× RELATED கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது