உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான 47 நாளில் இளம்பெண் தற்கொலை-ஆர்டிஓ விசாரணை

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எ.சாத்தனூர்  கிராமத்தை சேர்ந்த முருகன் மகள் காயத்திரி(23). டிப்ளமோ நர்சிங் படித்திருந்தார். இவருக்கும், பழங்குனம் கிராமத்தை  சேர்ந்த ரகோத்தமன் என்பவருக்கும்  கடந்த 47 நாட்களுக்கு முன்  திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் 10 நாட்கள்  காயத்திரி பழங்குனம் கிராமத்தில் இருந்துள்ளார். அதன் பிறகு  தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கூறி வந்த காயத்திரி கடந்த மாதம் உளுந்தூர்பேட்டை அடுத்த உளுந்தாண்டார்கோவில் பகுதியில் உள்ள தனது  பாட்டி வீட்டில்  தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி காயத்திரியின் கணவர்  ரகோத்தமன் தனிக்குடித்தனம் செல்ல வீடு பார்க்கலாம் என கூறி வந்ததாக  தெரிகிறது. இந்த நிலையில் தனது அம்மாவிடம் குளிக்க செல்வதாக கூறி ஒரு  குடத்தில் மண்ணெண் ணெய் ஊற்றி சென்று குளியலறையில் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.  இதில் உடல் முழுவதும் பலத்த காயம்  அடைந்த காயத்திரியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு  மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்  சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  தீவிர சிகிச்சை  பலனின்றி காயத்திரி  பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை  காவல்நிலையத்தில் காயத்திரியின் சகோதரர் சூர்யா கொடுத்த புகாரின் பேரில்  சப்இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார். காயத்திரிக்கு திருமணமாகி 47 நாட்களே ஆவதால் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர்  யோகலட்சுமி, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் ஆகியோர் மேல் விசாரணை  செய்கின்றனர். 

Related Stories: