×

சேத்துப்பட்டு அடுத்த அரசம்பட்டு கிராமம் பெரிய வீட்டம்மன் கோயிலில் ஆடிவெள்ளி திருவிழா-பிறந்த வீட்டு பெண்கள் மட்டும் பங்கேற்பு

சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு அடுத்த அரசம்பட்டு காட்டுப்பகுதியில் உள்ள பெரிய வீட்டம்மன் கோயிலில் நடந்த ஆடிவெள்ளி திருவிழாவில், பிறந்த வீட்டு பெண்கள் மட்டும் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா, அரசம்பட்டு கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு 8 அண்ணன்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள் பெரிய வீட்டம்மன். இவர், திருமணமாகி மகப்பேறு காலத்தில் தனது தாய் வீட்டிற்கு வந்தார்.  அப்போது, அவரது அண்ணனின் மனைவிகள், தனது கணவர் முன்பு மட்டும் அம்மனிடம் பாசமாக பேசியுள்ளனர். பிறகு, அம்மனை கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும், அவர் மீது அபாண்ட பழி சுமத்தியதால் வேதனையடைந்த அம்மன் வீட்டைவிட்டு வெளியேறி, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டார்.

பின்னர், அங்குள்ள சித்திரை முள் பாறை மீது அமர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. அங்கேயே அம்மனுக்கு  ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து, தங்கையை காணவில்லை என அண்ணன்கள் காட்டுப்பகுதிக்குள்  வந்து தேடினர். அப்போது, அவர்களது கண்ணில் மட்டும் தோன்றிய பெரிய வீட்டம்மன் நான் தெய்வமாகிவிட்டேன். எனக்கு அண்ணன்,  தம்பிகள், உங்களது வயிற்றில் பிறந்த பிறப்புகள் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடலாம். அவர்கள் வளமாகவும், நலமாகவும் வாழ நான் துணை நிற்பேன்.

ஆனால், புகுந்த வீட்டு பெண்களான மாமியார்கள்  மற்றும் மருமகள்கள் எனக்கு செய்யும் பூஜையை பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால் அவர்களை கண்டிப்பாக நான் தண்டிப்பேன் என தெரிவித்து மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனை மீறி அம்மனை பூஜை நேரத்தில் பார்த்த புகுந்த வீட்டு பெண்களுக்கு பார்வை மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிது. எனவே, கிராமத்தில் உள்ள பெண்கள் பெரிய வீட்டம்மன் பூஜை நேரத்தில் யாரும் சென்று பார்ப்பதில்லை.

தொடர்ந்து, ஆண்டுதோறும் ஆடி மாதம் 3ம் வெள்ளிக்கிழமையன்று அரசம்பட்டு கிராமம் காட்டுப்பகுதியில் சித்திரை முள் பாறையில் உள்ள பெரியவீட்டம்மன் கோயில் திருவிழா நடத்துவது வழக்கம்.அதன்படி, நே‌ற்று நடந்த ஆடிவெள்ளி திருவிழாவில், அரசம்பட்டு  கிராமத்தில்  பிறந்த பெண்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அனைவரும் கோயிலுக்கு வந்து ஊரணி பொங்கல் இட்டு பெரிய வீட்டம்மனை வழிபட்டனர்.

பின்னர், படையலிட்ட சாதத்தை அனைவரும் கோயிலில் அமர்ந்து சாப்பிட்டனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பெரிய வீட்டம்மன் கோயிலில் வழங்கப்பட்ட சாதத்தை வாங்கி, பயபக்தியுடன் சாப்பிட்டனர். அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டினர். குழந்தை பெற்ற பெண் பக்தர்கள் வேண்டுதலை  நிறைவேற்ற எடைக்கு எடை நாணயம், திருமணத்தடை நீங்கி திருமணமானவர்கள் தம்பதிகளாக வந்து மாங்கல்யம் ஆகியவற்றை  கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.

குன்றின் மீதுள்ள சுனைநீரை பொதுமக்கள் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாக வீட்டிற்கு எடுத்து சென்றனர். பக்தர்களுக்கு இளைஞர்கள் அன்னதானம் செய்தனர். ஆனால், இந்த திருவிழாவில் அந்த ஊரை சேர்ந்த மாமியார்கள் மற்றும் மருமகள்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Adivelli festival ,Periya Veetamman temple ,Sethupattu ,Arashampattu , Sethupattu: At the Adivelli festival held at Periya Veetamman temple in Arashampatu forest next to Sethupattu, the birth house
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே