தளி அருகே பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் செயலர் உள்பட மேலும் 9 பேர் கைது

தேன்கனிக்கோட்டை : தளி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் கொலை வழக்கில், மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள பி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி(46), தாரவேந்திரம் ஊராட்சி மன்ற தலைவரான இவர், கடந்த 2ம்தேதி இரவு தளியிலிருந்து கிராமத்திற்கு டூவீலரில் சென்றபோது, மர்ம நபர்களால் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். சடலத்தை கைப்பற்றி, தளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சாக்கம்மா மகன் ரவி (எ) திம்மைய்யா(38), சிவமாலா(எ) கரியா(27) ஆகிய இருவரும், கடந்த 3ம்தேதி ஓமலூர் போலீசில் சரணடைந்தனர்.போலீசாரிடம் ரவி அளித்த வாக்குமூலத்தில், ‘ரவி குடும்பத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை, ஊராட்சி தலைவர் நரசிம்மமூர்த்தி ₹75 லட்சத்திற்கு விற்றதாகவும், அதில் ₹13 லட்சம் மட்டும் வழங்கியதாகவும், மீதி பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்ததை கேட்டபோது, கொலை செய்து விடுவதாக மிரட்டியதால், அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.  

பின்னர், இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார், சேலம் சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ராக்கேஷ்(21), முனிராஜ்(25), புட்டமாரி(31), கிருஷ்ணா(36), மல்லேஷ்(25), சங்கரப்பா(30), மாதேஷ்(29), தியாகராஜ்(22), ஊராட்சி செயலர் பிரசன்னா(48) ஆகிய 9 பேரை, நேற்று கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related Stories: