×

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காக 'பிங்க்'நிற பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காக பிங்க் நிற பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.  இந்த சேவையை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதற்கட்டமாக 61 இளஞ்சிவப்பு நிற பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன. இலவசமாக பயணிக்கும் பேருந்தை பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் பேருந்துகளின் முகப்பு மற்றும் பின்புறம் பிங்க் நிறமாக மாற்றப்பட்டுள்ளது. பெண்கள் இலவசமாக பயணிக்க டீலஸ்க், சொகுசு பேருந்தில் ஏறி குழப்பமடைவதை தவிர்க்க பிங்க் நிற பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அண்ணா சதுக்கம்  பேருந்து நிலையத்தில் இருந்து  இந்த பேருந்துகள் பயன்பாட்டுக்கு வருகின்றன. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரிதும் வரவேற்பை பெற்றது தான் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம். பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்பட அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க திமுக அரசு வழிவகை செய்துள்ளது. அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

அதில், மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயணம் மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர். இருப்பினும், எது இலவச பேருந்து என்று மக்கள் மத்தியில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. சாதாரண கட்டண பேருந்துகளை மகளிரால் அடையாளம் காண முடியாததால் மற்ற பேருந்துகளில் மாறி  ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை சரிசெய்யும் விதமாகவே தற்போது இலவச பேருந்துகளில் பிங்க் வண்ணம் பூசப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக அளிக்கப்பட்டுள்ளது.


Tags : MLA ,Chennai Corporation ,Udayanidhi Stalin , Chennai, Girls, 'Pink' colored bus, M.L.A. Udayanidhi Stalin
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...