×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜரானார் மருது அழகுராஜ்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும், நமது அம்மா நாளேட்டின் ஆசிரியருமான மருது அழகுராஜ் தனிப்படை போலீசாரிடம் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான சேலம் இளங்கோவன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவரை சந்தித்து உண்மைச்சம்பவங்களை நீர்த்துப்போக செய்வதாக பேரம் பேசியதாக வெளியான தகவல்கள் பற்றிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மருது அழகுராஜ் கோரியிருந்தார்.

இந்த தகவல்களின் அடிப்படையில் அவருக்கு தனிப்படை போலீசார் அழைப்பாணை அனுப்பினர். தனிப்படை போலீசார் அழைப்பாணையை ஏற்று இன்று ஆஜராகப்போவதாக மருது அழகுராஜ் தெரிவித்த நிலையில், தற்போது ஆஜரானார். பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டவர்களையும் தனிப்படை போலீசார் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும், சிசிடிவி பதிவுகளை சேகரித்து காலதாமதமின்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஓய்வெடுக்கும் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி ஒரு கும்பல் நுழைந்து, காவலாளி ஓம் பகதூரை கொலை செய்ததுடன், எஸ்டேட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அதிமுக வர்த்தக அணியை சேர்ந்த மர வியாபாரி சஜீவன், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ஆஜரான மருது அழகுராஜிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் அடிப்படையில் விசாரணை விரிவு படுத்த வேண்டும்; எடப்பாடி பழனிசாமியின் நண்பரான சேலம் இளங்கோவனையும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். அதனடிப்படையில் தனிப்படை போலீசார் அழைப்பாணையை அனுப்பிய நிலையில், அதனை ஏற்று இன்று ஆஜராகியுள்ளேன் என அவர் பேட்டியளித்தார்.


Tags : marudu sayuguraj ,kodanadu , Kodanadu, Murder-Robbery, Investigation, Aajar, Maruthu Aghraj
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...