காஸா மீது இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்!: பாலஸ்தீன போராளிகளை குறிவைத்து குண்டுவீச்சு.. 5 வயது சிறுமி உள்பட 10 பேர் உயிரிழப்பு..!!

காஸா: காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காஸா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு இஸ்ரேல் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகள் மேற்கு கரை பகுதியில் பதுங்கி இருந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரை கைது செய்திருந்த நிலையில், நேற்று இரவு காஸா முனையின் மத்திய பகுதியில் சரமாரியாக வான்வழி தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த பாலஸ்தீன தீவிரவாத அமைப்பினரை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இடைக்கால பிரதமர் யாயிட் லாபிட் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலுக்கும், குடிமக்களுக்கும் தீங்கு இழைப்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஹமாஸ் அமைப்பை சேர்ந்த டைசி அல் ஜபாரி என்பவரின் இருப்பிடத்தை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் அல் ஜபாரி கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் 5 வயது சிறுமி, ஒரு பெண் உள்ளிட்ட மேலும் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேலில் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இடைக்கால பிரதமராக இருக்கும் லாபிட்  தன்னுடைய பலத்தை நிரூபிக்க இந்த தாக்குதலை நிகழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு எந்நேரத்திலும் பாலஸ்தீனம் பதிலடி தரும் என்பதால் இஸ்ரேலில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. வான்வழி தாக்குதல்களை தடுக்க இஸ்ரேல் விமானப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Related Stories: