மதுராந்தகம் ஒன்றியம் கெண்டிரச்சேரி ஊராட்சியில் ஜல்லி கற்கள் பெயர்ந்த மண் பாதையை தார் சாலையாக மாற்ற வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: கெண்டிரச்சேரி ஊராட்சியில் பொது பணித்துறைக்கு சொந்தமான பாதையில் மண் சாலைக்கு பதில், தார் சாலை அமைத்து தர ேவண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் கெண்டிரச்சேரி ஊராட்சி உள்ளது. இங்கு, 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்டது வடக்கு காலனி பகுதி. இங்கு, 70 குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் போக்குவரத்திற்காக இந்த ஊராட்சியில் உள்ள அக்குளத்து ஏரி என அழைக்கப்படும் விவசாய பாசன ஏரிக்கரையின் மீது சிறிய அளவிலான மண் சாலை உள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலையை கடந்துதான் இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பள்ளி மாணவ, மாணவியர், மருத்துவமனை செல்வோர் என அனைவரும் மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

ஆனால், இந்த சாலை மக்கள் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக இந்த மண்சாலை மாறிவிடும். அப்போது அந்த வழியாக செல்பவர்கள் சேற்றில் வழுக்கி விழும் நிலை உள்ளது. மேலும், இந்த சாலை ஏரி கரையின் மீது அமைந்துள்ளது என்பதால் ஏரியில் விழுந்தால் மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘இரவு, பகல் எந்த நேரம் ஆகிலும் இந்த சாலையை பயன்படுத்தி தான் எங்கள் கிராமத்து மக்கள் சென்று வருகின்றனர். உடல்நிலை சரியில்லை, விபத்துக்கள் போன்ற அவசர நேரங்களில் உடனடியாக வெளியில் சென்று வர வேண்டும் என்றாலும் இந்த மோசமான சாலையை பயன்படுத்தி தான் மதுராந்தகம் நகரம் சென்று வரவேண்டியுள்ளது. மேலும், அவசர நேரங்களில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்க முடியாது. அப்படியே வாகனத்தை ஓட்டினாலும் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் ஏரியில் விழுந்து நீரில்தான் மூழ்க வேண்டிய நிலை உள்ளது. இப்படியான மோசமான நிலையில் தான் இந்த சாலையை எங்கள் கிராமத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து நாங்கள் அரசு அதிகாரிகளின் கவனத்தை கவரும் விதமாக சில போராட்டங்களையும் நடத்திப் பார்த்து விட்டோம். ஆனால், இந்த சாலையை சீரமைத்து தர அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த குறிப்பிட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவை, தங்கள் கிராம மக்கள் கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்’என்றார். இதுகுறித்து அந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கீர்த்தனா ரகு என்பவரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட அந்த ஏரிக்கரை சாலையானது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. அதன் மீது சாலை அமைக்க பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பொதுப்பணித்துறை அனுமதி வழங்கவில்லை. பொதுமக்களின் நலன் சார்ந்த முக்கியமான விஷயங்களில் கூட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதனால், அந்த சாலை அரசு உதவியுடன் அமைக்க முடியாமல் இருக்கிறது. கிராம மக்கள் ஒன்றிணைந்து அவ்வப்போது அந்த சாலையை ஜல்லி, மண் கொண்டு சீரமைக்கிறோம். இருப்பினும் இந்த சாலையை முழுமையாக அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்’என்றார்.

Related Stories: