×

காமன்வெல்த் விளையாட்டு திருவிழா 2022

சிட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரடுகானு
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடக்கும் சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு தகுதி பெற்றார். கொலம்பியாவின் கமிலா ஒசாரியோவுடன் மோதிய ரடுகானு 7-6 (7-5), 7-6 (7-4) என்ற நேர் செட்களில் 2 மணி, 50 நிமிடம் போராடி வென்றார். கானெபி (எஸ்டோனியா), கலின்ஸ்கயா (ரஷ்யா), டாரியா சவில்லி (ஆஸி.), ஆண்ட்ரியா பெட்கோவிச் (ஜெர்மனி) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

பேட்மின்டன் காலிறுதிக்கு  சிந்து, கிடாம்பி முன்னேற்றம்
பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டித் தொடரின் பேட்மின்டன் மகளிர் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றனர்.மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உகாண்டா வீராங்கனை ஹுசினா கோபுகபேவுடன் நேற்று மோதிய சிந்து 21-10, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இலங்கையின் துமிந்து அபேவிக்ரமாவை எதிர்கொண்ட கிடாம்பி 21-9, 21-12 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மல்யுத்தத்தில் அசத்தல் இந்தியாவுக்கு 3  தங்கம் ஒரு  வெள்ளி, 2 வெண்கலம்

ஆண்கள் மல்யுத்தம் பிரீஸ்டைல் 65 கிலோ எடை பிரிவு அரையிறுதியில் இங்கிலாந்தின் ஜார்ஜ் ராமுடன் மோதிய இந்திய நட்சத்திரம் பஜ்ரங் பூனியா 10-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். பைனலில் நவ்ரூ நாட்டை சேர்ந்த லோவ் பிங்காமை 0-5 என வென்று தங்கப்பதக்கத்தை பஜ்ரங் பூனியா தட்டிச்சென்றார். இதன் மூலம் அவர் காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதில், தொடர்ந்து 2ம் முறையாக தங்கம் வென்றுள்ளார்.

ஆண்கள் மல்யுத்தம் 86 கிலோ பிரீஸ்டைல் பிரிவு அரையிறுதியில் களமிறங்கிய இந்திய வீரர் தீபக் பூனியா 3-1 என்ற புள்ளிக் கணக்கில் கனடாவின் அலெக்சாண்டர் மூரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் பாகிஸ்தானின் முகமது இனாமுடன் மோதினார். இதில், 3-0 என்ற புள்ளிக்கணிக்கில் வென்று தங்க பதக்கத்தை முத்தமிட்டார்.  125 கிலோ எடை பிரிவில் மோஹித் க்ரேவல் வெண்கலம் வென்றார்.

மகளிர் 62 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்தம் அரையிறுதியில் கேமரூன் வீராங்கனை எடானே கோல்லேவுடன் மோதிய இந்திய நட்சத்திரம் சாக்‌ஷி மாலிக் 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இறுதி போட்டியில், கனடாவின் அனா கோடினெஸ் கோன்சாலசுடன் மோதினார். இதில், 4-0 என்ற புள்ளிகள் தங்கம் வென்றார். மகளிர் பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவு மல்யுத்தம் அரையிறுதியில் இலங்கையின் நேத்மி பொருதோடகேவுடன் மல்லுக்கட்டிய அன்ஷு மாலிக் 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.

பைனலில் நைஜிரீயாவின் துனாயோ போலாசடே அடேகுரோயோயேவுடன் மோதிய அன்ஷு மாலிக் 4-6 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றார். 68 கிலோ எடை பிரிவில் திவ்யா வெண்கலம் வென்றார். இவர், 2வது முறையாக தொடர்ச்சியாக பதக்கம் வென்று சாதித்துள்ளார். இதன் மூலம் ஒரே நாளில் இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று பதக்கம் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.

Tags : Commonwealth Games Festival , Commonwealth Games, Wrestling, Gold Medal,
× RELATED காமன்வெல்த் விளையாட்டு திருவிழா