×

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8,000 வட்டி தருவதாக பல கோடி மோசடி: ஐஎப்எஸ் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 21 இடங்களில் அதிரடி சோதனை

*சென்னையில் 10 இடங்களில் நடந்தது
*முக்கிய ஆவணங்களை கைப்பற்றி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை
*50க்கும் மேற்பட்ட போலீசாரும் முதலீடு செய்து ஏமாற்றம்

சென்னை:  ஐஎப்எஸ் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக ‘இன்டர்நேஷ்னல் பைனான்சியல் சர்வீசஸ்’(ஐஎப்எஸ்) என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், ஆற்காடு என தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கிளை உள்ளது. இந்த நிறுவனம், எங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதாமாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வட்டி தருவோம்  என்று அறிவித்தது.

இதை நம்பி, தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர், இன்டர்நேஷ்னல் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். விளம்பரத்தில் கூறியபடி, முதல் 2 மாதங்கள் மட்டும் ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு  மாத வட்டியாக ரூ.8 ஆயிரம் தந்துள்ளனர். அதன் பிறகு வட்டி கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. அதைதொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதேநேரம், காவல் துறையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்ததும் தெரியவந்தது.

பின்னர் இன்டர்நேஷ்னல் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், ஆற்காடு, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 21 இடங்களில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.குறிப்பாக, ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியில் வசித்து வரும் ஜனார்த்தனன் வீட்டில் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கணநேசன் தலைமையில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் காட்பாடியில் உள்ள நிதிநிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்தது. மேலும், நிதி நிறுவனத்தின் முக்கிய ஏஜென்ட் சுகுமாருக்கு சொந்தமான சத்துவாச்சாரி அடுத்த செங்காநத்தம் வீட்டிலும் சோதனை நடந்தது. அதேபோல், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகில் உள்ள மின்மினி சரவணன் என்பவர் வீடு உட்பட 3 இடங்களில் காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றினர்.

சென்னையை பொருத்தவரையில், நுங்கம்பாக்கம் நட்சத்திர ஓட்டல் அருகே உ ள்ள சசி டவர் என்ற கட்டிடத்தில் இயங்கி வரும் இன்டர்நேஷ்னல் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், கிண்டி தாமரை டெக் பார்க் கட்டிடத்தில் இயங்கி வந்த அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்றதற்கான ஒப்பந்த பத்திரங்கள் கட்டுக்கட்டாக கைபற்றப்பட்டுள்ளது. மேலும், பல கோடி ரூபாய் பணம், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வுக்கு பிறகே நிதி நிறுவனம் எத்தனை கோடி மோசடி செய்துள்ளது என்று தெரியவரும்.

Tags : IFS Finance , Multi-Crore Scam Claiming Interest of Rs.8,000 per month on investment of Rs.1 Lakh: Action raid at 21 locations belonging to IFS Finance Company
× RELATED தலைமறைவான ஐஎப்எஸ் நிதி நிறுவன...