கனரா வங்கியின் உத்தரவு: ஐகோர்ட்டில் உறுதி விருப்ப ஓய்வில் சென்றவருக்கு ஓய்வூதிய பலன் தர முடியாது

சென்னை: விருப்ப ஓய்வு திட்டத்தில் பணியிலிருந்து விலகியவருக்கு ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்க மறுத்த கனரா வங்கியின் உத்தரவு சரியானது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனரா வங்கியில் 1984ம் ஆண்டு எழுத்தராக பணியில் சேர்ந்த எஸ்.குணசேகரன் என்பவர் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 2008 ஜூலை 31ம் தேதி பணியிலிருந்து விலகினார்.

 இந்நிலையில் கடந்த 1995ம் ஆண்டு கனரா வங்கி பென்ஷன் ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ் 1995 அக்டோபர் 21ம் தேதி முதல் 2010 அக்டோபர் 27ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு அமல்படுத்திய பென்ஷன் திட்டத்தில் தன்னையும்  சேர்க்க  கனரா வங்கிக்கு உத்தரவிட கோரி 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

 இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் பணியை விட்டு சென்றபோது, சேமநல நிதி திட்டத்தை மனுதாரர் தேர்ந்தெடுத்ததால் பென்ஷன் திட்டத்தை அவருக்கு அமல்படுத்த முடியாது என்று கனரா வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களுக்காக மட்டும் கனரா வங்கி பிறப்பித்த திட்டம் ராஜினாமா செய்தவருக்கு பொருந்தாது. இந்த வழக்கில் கனரா வங்கியின் நிலைப்பாடு சரிதான் என்று உத்தரவிட்டு குணசேகரனின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories: