6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: கால்நடை, பால்வளம், மீன்வளம், மீன்வளர்ச்சிக் கழகம் கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஜவஹர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த நவீன வேளாண்மை மற்றும் நீர் நிலைகள் மறு சீரமைப்பு திட்டம் முதன்மை செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் கே.மணிவாசன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளராக இருந்த ஏ.கார்த்திக், கால்நடை, பால்வளம், மீன்வளம், மீன்வளர்ச்சிக் கழகம் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ) மேலாண் இயக்குனராக இருந்த டி.ஆனந்த், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக இருந்த எஸ்.மதுமதி, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்கழகம் (சிட்கோ) மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த தயானந்த் கட்டாரியா கடந்த  1ம் தேதி மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக்  கொண்டார்.  இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை செயலாளர் பதவியை கூடுதலாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா வகித்து வந்தார். இந்த நிலையில் சந்தீப் சச்சேனா கூடுதலாக கவனித்து வந்த பதவி மணிவாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: