பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் சசிகலாவுடன் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் திடீர் முடிவு

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்ததால், அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம், சசிகலாவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மோதல் முற்றியதைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஒரு சில நிர்வாகிகளின் ஆதரவு மட்டுமே பன்னீர்செல்வத்துக்கு உள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஆகியோரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனால், தனது ஆதரவாளர்களை திரட்டி பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கட்சியில் பின்னடைவை சந்தித்தது போல் கோர்ட் வழக்குகளிலும் தொடர்ந்து பின்னடைவையே பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார். ஆனாலும், தனது பிடி தளர்ந்து விடாதபடி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளார். இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூறும்போது, ‘விரைவில் பொதுக்குழு கூட்டம் நடத்தவும், பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். அடிமட்டத்தில் கட்சியை வலுப்படுத்தவும் பணிகளை வழங்கி இருக்கிறார்’ என்றனர்.இதற்கிடையில் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களிடமும் இணைந்து செயல்படும்படி ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்துக்கு சென்ற தினகரனுக்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும் சில மாவட்டங்களில் சசிகலா, தினகரன் ஆகியோர் சென்றால் வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளார்கள். சசிகலாவும் தனது ஆதரவாளர்களிடம் அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியுள்ளதால், விரைவில் அவர்கள் இருவரும் சேர்ந்து கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: