திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய இடத்தில் பேருந்து நிலையம்; அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் பூர்த்தி அடைந்தது.  அப்போதிருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 பேருந்துகள் மட்டுமே திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு  வந்து சென்றது.

நாளடைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள் செயல்படத் தொடங்கியது.

இதனால் ஏராளமானோர் தங்களின் தேவைகளுக்காகவும்,  கோரிக்கைகளுக்காகவும் திருவள்ளூர் நகருக்கு வந்து செல்கின்றனர். அதேபோல் தற்போது அருகே அரசு சட்டக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரிகளும்,  திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் அதிகளவில் தொடங்கப்பட்டு  செயல்பட்டு வருகின்றன. இதனால் சென்னை, காஞ்சிபுரம், வேலூர்  உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன. தற்போது திருவள்ளூர்  பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, திருப்பதி, அரக்கோணம், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 80 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதே போல் சென்னை மாநகரப் பேருந்துகள் திருவள்ளூர் வந்து அங்கிருந்து ஆவடி, பூந்தமல்லி, கோயம்பேடு, தி.நகர்,  செங்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு 80 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.  அதே போல் 50-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் வந்து செல்கின்றன.  திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து பணிமனையில் இருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவள்ளூருக்கு ஆயிரக் கணக்கான மக்கள் பேருந்துகளில் வருகை தருகின்றனர். அதே போல் திருவள்ளூரில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் செல்கின்றனர்.

இதனால் திருவள்ளூர் நகரில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரசிலாகவே காணப்படுகிறது.  அது மட்டுமல்லாமல் பேருந்து நிலையத்திற்கு வரும் சாலையும் குறுகிய சாலையாக இருப்பதால் மாலை நேரத்தில் பள்ளி விடும்போது போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கமும், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுமோ என்ற பயமும் அவ்வழியாக செல்லும் அனைவருக்குமே தோன்றும்.   நகரின் மையப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியபடியே நாள்தோறும் செல்கின்றனர். அதே போல் காலை மாலை நேரங்களில் நாள்தோறும் படிக்கட்டுகளில் தொங்கியபடியே மாணவர்கள் செல்லும் நிலையும் உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகளவில் காணப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து கோரி்க்கை விடுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து பள்ளிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பஜார் வீதிக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என பெரும்பாலானோர் ஆட்டோவில் பயணிக்கின்றனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் திருவள்ளூர் நகரில் காலை முதல் இரவு வரை இயங்குவதால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதே நேரத்தில் திருவள்ளூர் நகரில் சாலை விபத்துக்கள்... அல்லது அரசியல் கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற காலங்களில் பெரும்பாலான கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் வரும் போது திருவள்ளூர் நகரமே திக்குமுக்காடிப் போகிறது.  இதனையடுத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வேடங்கிநல்லூர் என்ற பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து 6 ஏக்கர் இடம் பேருந்து நிலையம் அமைக்க போதுமானதாக இருக்காது  என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியிலும் பேருந்து நிலையம் அமையம் வாய்ப்பில்லாமல் போனது.எனவே திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும்,  உயிரிழப்புகளை தடுக்கவும் மாவட்டம் நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: