சிறுவன் கொலையில் இருவர் கைது; வீடுபுகுந்து திருடியதை பார்த்து கூச்சலிட்டதால் கொன்றோம் பரபரப்பு வாக்குமூலம்

தண்டையார்பேட்டை: மேற்கு வங்க மாநிலம், மதன்பூரை சேர்ந்த சுர்பதி சர்தார் என்ற 17 வயது சிறுவன், கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் இருந்து வேலை தேடி சென்னை வந்துள்ளான். பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து தண்டையார்பேட்டை புது வைதியநாதன் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தான். கடந்த 3ம் தேதி சுர்பதி சர்தார் தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அதனால் வேலைக்கு வரவில்லை என்றும் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனால், அவரை வீட்டிலேயே விட்டுவிட்டு சக நண்பர்கள் வேலைக்கு சென்றனர். வேலை முடிந்து இரவு சக நண்பர்கள் வீடு திரும்பினர். அப்போது, சுர்பதி சர்தார் கழுத்தறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சுர்பதி சர்தார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், காசிமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிரபு (24) மற்றும் திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது, சுர்பதி சர்தாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது: ரவுடி பிரபுவும், அந்த சிறுவனும் சம்பவத்தன்று சுர்பதி சர்தார் வீட்டு வழியாக சென்றுள்ளனர். அப்போது, அந்த வீடு திறந்து இருந்ததால், உள்ளே நுழைந்து திருட முயன்றுள்ளனர். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த சுர்பதி சர்தார் சத்தம் கேட்டு எழுந்து, திருடன்... திருடன்... கூச்சலிட்டுள்ளான்.  இதனால், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவனது கழுத்தில் வெட்டிள்ளனர். இதில், சுர்பதி சர்தார் ரத்த வெள்ளத்தில் மயங்கினான். இதையடுத்து, அங்கிருந்த செல்போனை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர். பின்னர், அந்த செல்போனை விற்று பணத்தை இருவரும் எடுத்துக்கொண்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

 இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: