×

மண்டல பறக்கும் படைக்குழு தீவிரம் சென்னையில் 1,087 ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை:  சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதும், கடைகளை போட்டு வியாபாரம் நடத்துவதும் அதிகமாகி வருகிறது. நடைபாதைகள் நடப்பதற்கே என்று மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டாலும் அது ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கு பொதுமக்கள் சார்பாக புகார்களும் அளிக்கப்பட்டு வந்தது. அத்துடன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மருத்துவமனை, பள்ளிகள், ரயில் நிலையம் அருகில் 100-150 மீட்டர் தொலைவுக்குள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்பட வேண்டும் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடை பாதை மற்றும் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வாகனங்களை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.  நடைபாதையை விரிவுப்படுத்தும் பணிகள் சென்னை முழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதற்காக நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டம் நடத்துவதும், எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கமாக நடக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. எனினும் சென்னை மாநகராட்சி நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உறுதியாக உள்ளது. அவ்வாறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் நடைபாதைகளில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் வணிக வளாகங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நடைபாதை சிறு வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு வசதியாக அந்தந்தப்பகுதிகளில் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல பறக்கும் படைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் மழைநீர் வடிகால் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் பலனாக இதுவரை 1,087 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பை ஏற்படுத்தியுள்ள நபர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மண்டல பறக்கும் படை குழுவினரால் இதுநாள் வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 15 மண்டலங்களில் 113 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள் மற்றும் 974 தற்காலிக கூடாரங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 1,087 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 902 மெட்ரிக் டன் அளவிலான கட்டிடக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.  மேலும், மழைநீர் வடிகால்களிலிருந்து 487 கழிவுநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Zonal Flying Squad ,Chennai , Zonal Flying Squad intensity 1,087 encroachment removal officials in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...