×

ஹெராயின், துப்பாக்கி பறிமுதல் செய்த விவகாரம்; இலங்கை நபரை கேளம்பாக்கத்தில் கைது செய்தது என்ஐஏ திருச்சி சிறையில் 18 கிலோ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

சென்னை: லட்சத்தீவின் அருகே கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடி படகு ஒன்று அத்துமீறி நுழைந்தது. அந்த படகை கடலோர பாதுகாப்பு படையினர் சோதனை செய்து, அதில் இருந்து பல கோடி மதிப்புள்ள 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உளவுப்பிரிவில் இருந்த சற்குணம் (எ) சபேசன் (47) உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அந்த தகவலை வைத்து, கடந்த மாதம் 20ம் தேதி சென்னை, திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாம் என தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் சோதனை நடத்தினர்.

பல முக்கிய ஆவணங்கள், சிம்கார்டு, லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன.  இதுதவிர திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபரின் பிறந்த நாளை 18 கிலோ கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோவும் என்ஐஏ அதிகாரிகளிடம் சிக்கி உள்ளது. இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, கேளம்பாக்கம் தையூரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்துடனும், சர்வதேச போதை மற்றும் ஆயுதம் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ள முகமது பைசல் கடந்த ஒன்றரை மாதங்களாக பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று காலை கேரளாவில் இருந்து வந்த என்ஐஏ இன்ஸ்பெக்டர் எபினேசன் பிரோன்கோ தலைமையிலான குழுவினர், முகமது பைசல் (43) தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர். அங்கிருந்து லேப்டாப், செல்போன், இலங்கை பாஸ்போர்ட் மற்றும் முக்கிய  ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இவர் 4 மாதங்களுக்கு முன்பு, தையூர் பகுதிக்கு வந்து மனைவி, மகனுடன் தங்கியிருந்தது தெரியவந்தது. தற்போது ஆயுத கடத்தலில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்ததால், முகமது பைசலை கைது செய்து, கேரளாவிற்கு அழைத்து
ெசன்றனர்.

Tags : Kelambakkam ,NIA ,Trichy , Heroin, firearms seizure issue; Sri Lankan man arrested in Kelambakkam NIA cut 18 kg cake in Trichy jail for birthday celebration
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!