×

பறவை முன்னோடி திட்டம் மூலம் இளம் குற்றவாளிகளுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி; போக்குவரத்து நிறுவன இயக்குநர் துவக்கி வைப்பு

சென்னை: பறவை முன்னோடி திட்டம் மூலம் 15 இளம் குற்றவாளிகளுக்கு இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சியின் முதல் பயிற்சி வகுப்பினை போக்குவரத்து நிறுவன இயக்குநர் ரங்கநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை: முதன் முறையாக சிறு குற்றம் புரியும் 24 வயதிற்குட்பட்ட இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் இந்த பறவை முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக காவல் துறையுடன் தமிழ்நாட்டின் திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தின் கீழ் 15 இளம் குற்றவாளிகளுக்கு இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி மற்றும் உரிமம் பெற நேற்று காலை 12 மணியளவில் முதல் நாள் பயிற்சியை போக்குவரத்து நிறுவன இயக்குநர் ரங்கநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது மைய இணை இயக்குநர் அனிதா மற்றும் காவல் அதிகாரிகள் உடன்இருந்தனர்.

இப்பயிற்சியின் பயனாளிகளுக்கு ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவேடுடன் 30 வேலை நாட்களுக்கு தரமணி ஐஆர்டி வளாகத்தில் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சியும் இயந்திர இயக்கங்கள் பற்றிய பயிற்சியும் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசால் போக்குவரத்து செலவிற்காக உதவித் தொகை நாள் ஒன்றுக்கு ரூ.100 வழங்கப்படும். அதுமட்டுமின்றி கட்டணமில்லா சீருடை, பயிற்சி புத்தகங்கள், எழுது பொருட்கள் புத்தக பை வழங்கப்படும். பயோமெட்ரிக் வருகை பதிவேடுடன் 55 வேலை நாட்களுக்கு கும்மிடிப்பூண்டு ஐஆர்டி வளாகத்தில் அரசு செலவில் உறைவிடத்துடன் கூடிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியும் இயந்திர இயக்கங்கள் பற்றிய பயிற்சியும் கொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Transport Corporation , Driving training for juvenile offenders through the Bird Pioneer Program; Inauguration by the Director of Transport Corporation
× RELATED டிப்போவில் ஓய்வெடுத்தவரிடம் செல்போன் திருடிய பஸ் டிரைவர்