×

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து தனியாக விசாரணை நடத்தினால் சட்ட நடவடிக்கை சிபிசிஐடி போலீஸ் எச்சரிக்கை

சென்னை: தனிநபரோ அல்லது நிறுவனமோ இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17 வயது பள்ளி மாணவி  இறந்தது  தொடர்பான வழக்கு  குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன்விசாரணையில் உள்ளது. விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்டு, மாணவி இறப்பு சம்பந்தமாக அனைத்து கோணங்களிலும் புலன் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன்விசாரணை நடைபெற்று வருகின்றது. சமூக ஊடகங்கள், பத்திரிகை  மற்றும் காட்சி ஊடகங்கள் இது சம்பந்தமாக அவர்களது சொந்தக் கருத்துக்களையும், அறிக்கைகளையும் காணொலி காட்சிகள் வாயிலாக வெளியிட்டும், இது சம்பந்தமாக இணையான புலன்விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் அமைகின்றது.  இத்தகைய சூழ்நிலையில், புலன்விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாமென்று அனைவரும் வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மேலும், இது தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன்விசாரணை மேற்கொள்ளவும் அனைவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு  துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும், அவர்களுடைய வலைதள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும்  உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகாரியின் செல்போன் எண் 9003848126 க்கு  நேரடியாக பகிரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Tags : CBCID Police ,Kallakurichi , CBCID Police warns of legal action if separate inquiry into Kallakurichi girl's death is conducted
× RELATED வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 8...