சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மெகா தடுப்பூசி முகாம்; 2,000 இடங்களில் நடக்கிறது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த  மாநிலத்திலும் இல்லாத அளவில் 32 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 40,34,207 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 55,40,537 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 47,96,817  நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 33வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நாளை (7ம் தேதி) நடைபெற உள்ளது.  இந்த முகாமிற்காக சென்னையில் ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்காக ஒரு வார்டிற்கு 5 சுகாதார குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1,000 சுகாதார குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தென்னக ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.  தற்போது, 75 நாட்களுக்கு அதாவது வருகின்ற செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  இதன் மூலம் கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

சென்னையில் இதுவரை 47,97,719 நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 4,34,244 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மொத்தம் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளின் சதவீதத்தில் 9.05% ஆகும்.  43,63,475 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

மேலும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியானது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும்.  எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளலாம். எனவே, முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள், இரண்டாம்  தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த  வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் 07.08.2022 அன்று நடைபெற  உள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை  செலுத்திக் கொள்லாம்.

Related Stories: