வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் மழை நீடிக்கும் என அறிவிப்பு

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பலத்த மழை பெய்து  வருகிறது. மேலும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் மாறுபட்டுள்ளதாலும் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் நேற்று மிக கனமழையும், கனமழையும் பெய்தது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 200 மிமீ மழை பெய்துள்ளது. சின்னக்கல்லார் 190 மிமீ, தேவாலா 180மிமீ, நடுவட்டம் 150 மிமீ, மேல்பவானி 140 மிமீ, சோலையாறு 130 மிமீ, வால்பாறை 120 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், அரபிக் கடல் பகுதியிலும் வங்கக் கடல் பகுதியிலும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி கடந்த இரண்டு நாட்களாக நிலை கொண்டுள்ளதால் நாளை அது காற்றழுத்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அப்படி உருவாகும் பட்சத்தில் கேரளா  தமிழகம் இரண்டு மாநிலங்களிலும் பலத்த மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மன்னார்  வளைகுடா பகுதி, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதி, வடக்கு கர்நாடக கடலோரப் பகுதிகளில், மணிக்கு 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: