×

விலைவாசி உயர்வை கண்டித்து பேரணி: ராகுல் உள்பட 65 எம்பிக்கள் கைது: பிரியங்காவை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றதால் பரபரப்பு

புதுடெல்லி: விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி.க்கள் அனைவரும் கருப்பு உடையில் பங்கேற்றனர். டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் 65  காங்கிரஸ் எம்பி.க்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கியதில் இருந்து, ஒருநாள் கூட முழுமையாக அலுவல் நடக்கவில்லை. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளை பற்றி விவாதிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்தி, நாடு முழுவதும் காங்கிரஸ் நேற்று போராட்டம் நடத்தியது. டெல்லியில் ஜந்தர் மந்தரை தவிர, டெல்லி மாவட்டத்தின் மற்ற பகுதிகள் அனைத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைமையிடம் அமைந்துள்ள அக்பர் சாலை முழுவதும் இரும்பு தடைகள் அமைக்கப்பட்டன. பொது போக்குவரத்தும் முழுமையாக மாற்று சாலையில் திருப்பி விடப்பட்டது. நேற்று காலை நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட அக்கட்சியின் அனைத்து எம்பி.க்களும் கருப்பு நிற ஆடை அணிந்து வந்தனர். அவை ஆரம்பித்ததும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, நேஷனல் ஹெரால்டு விவகாரங்களை கிளப்பி இரு அவைகளிலும் மைய பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து, தொடர் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அமளியில் ஈடுபட்ட 20 காங்கிரஸ் எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 பின்னர், வெளியே காங்கிரஸ் எம்பி.க்கள் அனைவரும் ராகுல் காந்தி தலைமையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி, ஜனாதிபதி மாளிகையை  நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால், 144 தடை உத்தரவு காரணமாக, விஜய் சவுக் பகுதியில் அவர்களை போலீசார் தடுத்து ராகுல் உட்பட 65 எம்பிக்களை போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் இருக்கும் அக்பர் சாலையில் சாலையில் அமர்ந்து கருப்பு உடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியும், தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

*ஜனநாயகம் செத்து விட்டது
போராட்டத்துக்கு முன்பாக ராகுல் காந்தி அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் ஜனநாயகம் செத்து விட்டது. ஜனநாயகத்திற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் போராடுவதால் தான் எங்களின் குடும்பம் குறி வைக்கப்படுகிறது. சமுதாயத்தின் முக்கிய பிரச்னைகளான விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, வன்முறை போன்றவை குறித்து யாரும் குரல் எழுப்பக் கூடாது என்பதுதான் ஒன்றிய அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. நான்கு பேரின் சர்வாதிகாரம் மட்டும் தான் தற்போது நாட்டில் நடந்து வருகிறது. உண்மையை மக்களிடம் கொண்டு செல்ல தொடர்ந்து பாடுபடுவேன். அதை யாராலும் தடுக்க முடியாது. என் மீதான தாக்குதலை, போரில் ஏற்படும் காயமாக நினைத்து மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். எனக்கு எதை நினைத்தும் பயம் இல்லை. நேஷனல் ஹெரால்டு குற்றச்சாட்டில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை,’ என தெரிவித்தார்.

Tags : Praivasi ,Raqul ,Priyanka , Protest against price hike: 65 MPs including Rahul arrested: Priyanka was bombarded
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்