பெண்ணுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய எம்பி: சமூக வலைத்தளத்தில் வைரல்

திருமலை: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி.யான கோரண்ட்லா மாதவ், இளம்பெண்ணுடன் நிர்வாண கோலத்தில் வீடியோ காலில் பேசியது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், கதிரி காவல் ஆய்வாளராக இருந்தவர் கோரண்ட்லா மாதவ். இவர் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது அக்கட்சி எம்பி திவாகர், போலீசார் குறித்து அவதூறாக பேசியதால் தனது மீசையை முறுக்கி, ‘போலீசார் குறித்து அவதூறாக பேசினால் நாக்கை அறுப்பேன்’ என மிரட்டினார். பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தார். அவர் 2019ம் ஆண்டில்  இந்துபுரம் எம்பி.யாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இளம்பெண் ஒருவருடன் இவர் வீடியோ காலில் பேசும்போது தனது அந்தரங்க உறுப்பை காட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த கோரண்ட்லா மாதவ், ‘தெலுங்கு தேசம் கட்சியினர் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மார்பிங் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது குறித்து எஸ்பியிடம் புகார் செய்திருக்கிறேன். இந்த வீடியோ தொடர்பாக எவ்விதமான விசாரணைக்கும் நான் தயார். இந்த வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அந்த வீடியோ என்னுடையது அல்ல,’ என தெரிவித்தார்.

இது குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளரும், அரசு ஆலோசகருமான சஜ்ஜலா ராமகிருஷ்ணா கூறுகையில், ‘இது தனிப்பட்ட விவகாரம் தொடர்பான வீடியோ. வீடியோவில் காணப்படும் நபர் (கோரண்ட்லா மாதவ்) தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுப்பதாக கூறியுள்ளார்.  இந்த வீடியோ மார்பிங் செய்யப்படாத ஒரிஜினல் வீடியோ என தெரிந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: