கரடு முரடாக இருப்பதால் அடிக்கடி விபத்து: பாதிரிக்குப்பம்-எம்.புதூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

கடலூர்: கடலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிரிக்குப்பம்- எம். புதூர் இடையே உள்ள சாலை கரடு முரடாக உள்ளதால் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் ஒன்றிய பகுதியில் அமைந்துள்ளது பாதிரிக்குப்பம், எம் புதூர். இதில் பாதிரிக்குப்பம் -கடலூர் மாநகராட்சியின் புறநகர் பகுதியாகவும் உள்ளது. மேலும் இப்பகுதியில் இருந்து எம் புதூர் செல்லக்கூடிய சாலை கடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பயண வழித்தடமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் கரடு முரடான இச்சாலை சுமார் 5 கி.மீ தூரம் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இரவு நேரங்களில் இச்சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிரிகுப்பம் மற்றும் எம்.புதூர் இடையே அமைந்துள்ள இச்சாலையை கடலூரில் நகர மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

Related Stories: