×

எது இலவச பேருந்துனு குழப்பமா இருக்கா? இனி கவலையே இல்ல!: சென்னையில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துக்கு பூசப்படும் இளஞ்சிவப்பு வண்ணம்..!!

சென்னை: சென்னையில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. பெண்கள் எளிதாக அடையாளம் காண, வெள்ளை போர்டு பேருந்துகளின் முகப்பு மற்றும் பின்புறம் இளஞ்சிவப்பு பூசப்படுகிறது. இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்ட பேருந்து இயக்கத்தை நாளை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிரும் நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்பட அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதில், மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், எது இலவச பேருந்து என்ற குழப்பம் மக்கள் மத்தியில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண கட்டண பேருந்துகளை மகளிரால் அடையாளம் காண முடியாததால் மற்ற பேருந்துகளில் மாறி  ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை தவிர்க்க சாதாரண கட்டண பேருந்துகளை மகளிர் எளிதாக அடையாளம் காண அந்த பேருந்துகளுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்படுகின்றது. இந்த செய்தி தற்போது மகளிர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி எது இலவச பேருந்து என்று அனைவராலும் எளிமையாக கண்டறிய முடியும்.


Tags : Chennai , Ladies free bus, pink colour
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...